"கூலி" சிகிடு சிகிடு! ரஜினிகாந்தும் டி.ராஜேந்தரும் உறவினர்களாமே! எப்படி தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்தின் கூலி படத்தில் டி.ராஜேந்தர் பணியாற்றியதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் ரஜினியை வைத்து டி.ராஜேந்தர் இயக்க ஆசைப்பட்ட கதை குறித்து அறிந்து கொள்ளலாம். அது போல் ரஜினியும் டி.ராஜேந்தரும் உறவினர்கள் என்ற விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் டி.ராஜேந்தர் பணியாற்றியதாக செய்திகள் வருகின்றன. 'சிகிடு சிகிடு' பாட்டில் அவர் குரல் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவர் லோகேஷோடு இணைந்து பணியாற்றியதாக செய்திகள் வந்துள்ளன.

பாட்டு பாடி இருக்கலாம். நடனம் ஆடி இருக்கலாம். பொதுவாக ரஜினி-கமல் ரைவல்ரி போல. ராஜேந்தருக்கு ரஜினி- ராஜேந்தர் ரைவல்ரி இருந்ததுண்டு. அவர் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ரஜினி படங்கள் போட்டிக்கு இருக்கும். பிற்காலத்தில் ரஜினி ஹிந்திக்கு போன பிறகு அது மாறிப்போனது.
ராஜேந்தரின் 'ஒரு தலைராகம்' ரிலீசானது 80 மே 2. ஒரு மாதம் கழித்து 4 ஜூனில் ரஜினியின் 'அன்புக்கு நான் அடிமை' ரிலீசானது. அப்போது அரங்கு நிறைந்து டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது ஒரு தலை ராகம். 82 மார்ச் 12ல் ராகம் தேடும் பல்லவியை ரிலீஸ் செய்தார் டி.ஆர்.
அதே தினம் ரஜினியின் 'தனிக்காட்டு ராஜா'வும் ரிலீசானது. ராகம் தேடும் பல்லவியில் நிறைய எடிட்டிங் தவறுகளால் படம் தொய்வாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் 'உயிருள்ளவரை உஷா' படத்தின் கதையை தயார் செய்தார் டி.ஆர்.
இப்போது வரை அவர் இயக்குனர் மட்டுமே. நேரே ரஜினியை சந்தித்து கதை சொல்லப் போனார் டி.ஆர். அவருக்கு அப்போது பண நெருக்கடி இருந்ததால் ரஜினி கால்ஷீட் கொடுத்தால் நன்றாக போகலாம் என நினைத்து முடிவெடுத்தார். ரஜினியின் கேரக்டர் பெயரை 'செயின் ஜெயபால்' என வைத்தார்.
ரஜினி புதுமுக இயக்குனர் என நினைக்காமல் டி.ஆரை மதித்து முழுக்கதையையும் கேட்டார். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் அவர் "படத்தை நீங்கள் இயக்குங்கள். தயாரிப்பு வேறொரு பெரிய கம்பெனி தயாரிக்கட்டும்" என ஒரு முடிவை சொன்னார். ஆனால் டி.ஆர் அதை ஏற்கவில்லை.
வெளியே வந்த அவர் தானே நடிப்பதாக தீர்மானித்து 'உயிருள்ளவரை உஷா'வை அறிவிப்பு செய்தார். அப்போது அவரை கைப்பிடித்த(கை கொடுத்த) உஷாவே படத்தை தயாரித்தார். படம் 83 மார்ச் 4ல் ரிலீசானது. அதே தினம் ரஜினியின் 'துடிக்கும் கரங்கள்' ரிலீசானது. உயிருள்ளவரை உஷா பாடல்கள் தமிழ்நாடெங்கும் பிச்சு உதறின என்றே சொல்லலாம்.
'மோகம் வந்து தாகம் வந்து என்னை அணைக்க' பாட்டெல்லாம் கேட்டால் என்ன காட்சி என பார்க்க தூண்டும் பாடலாக இருந்தன. 'இந்திரலோகத்து சுந்தரி' பாடல் இப்போது ஒரு அழகான மெலடி. 'வைகை கரை காற்றே நில்லு' பாடல் ஏற்படுத்தும் சோகமெல்லாம் வேறு சுவை.
'உன்னைத்தானே.... அழைத்தேன்' என ஒரு பாடல் இருக்கும். அதெல்லாம் எப்படி இந்த மனுஷன் கம்போஸ் செய்தார் எனத் தோன்றும். எஸ்.ஜானகியின் குழையும் குரல்...
இதற்கு நேர் எதிர் துடிக்கும் கரங்கள் பாடல்கள். இசை எஸ்.பி.பி. 'மேகம் முந்தானை' பாட்டு தவிர எதுவும் சொல்லும் படி இல்லை.
அதே வருடம் 83ல் நவம்பர் 4ல் 'தங்கைக்கோர் கீதம்-தங்கமகன்' மோதின. ராஜேந்தர் இதில் முழு ஹீரோவாக மாறி இருந்தார். முன்பு ரஜினி கொடுக்காத கால்ஷீட்டை இம்முறை சிவக்குமாரிடம் வாங்கி இருந்தார் டி.ஆர். ஒரு ஸேஃபர் ஸைடுக்காக வந்த சிவக்குமாரோடு, நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவும் அறிமுகமானார். இரண்டு படங்களுமே வசூலை குவித்தன.
அடுத்த வருடம் 84ல் ரஜினியின் 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தோடு தன் 'உறவைக் காத்த கிளி' படத்தை மோத விட்டார் டி.ஆர். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆரோடு பகைத்துக் கொண்டு திமுகவில் இணைந்திருந்தார் டி.ஆர். படத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி பற்றிய காட்சிகளை இணைத்து குடியின் தீமையை சொல்வதாக இரு வேடங்களில் டி.ஆர் நடித்தார்.
சிம்பு குழந்தையாக முதல் படம். அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்க சிகிச்சைக்கு சென்றிருந்தார். அவர் நலம் பெற வேண்டும் என்கிற பிரார்த்தனை வாசங்களுடன் இதயக்கனி படத்தில் வரும் 'நீங்க நல்லா இருக்கோணும்' பாடலுடன் படத்தை துவக்கியது ஏவிஎம். அது படத்துக்கு ஒரு பாஸிட்டிவ் வைப் கொடுக்க 'நல்லவனுக்கு நல்லவன்' கதையும் அசத்த படம் சூப்பர் ஹிட். டபுள் ரோல் நடித்த உ.கா.கிளி தோல்வியடைந்தது.
86ல் ஜனவரியில் மிஸ்டர் பாரத், மார்ச்சில் நான் அடிமை இல்லை. பிப்ரவரியில் மைதிலி என்னை காதலி ரிலீசாக அதுவும் பாடல்களால் ஹிட். இப்போது திமுகவினரின் முழு ஆதரவும் டி.ஆருக்கு கிடைத்தது. எதிர்க்கட்சியிலிருந்த கலைஞரை போற்றிய நடிகனாக டி.ஆர் மட்டுமே இருந்தார் அப்போது. ராஜா சின்ன ரோஜா- சம்சார சங்கீதம் 89ல் மோதின.
ராஜா சின்ன ரோஜா ஜெயித்தது. சம்சார சங்கீதம் ஒரே மாதிரி அலுப்பைத் தரும் படமானது.
பின் கடைசியாக 99ல் ராஜேந்தர் படையப்பாவுடன் தன் 'மோனிஷா என் மோனலிஸா' படத்தை மோத விட்ட போது அவரது நடிப்பு சாம்ராஜ்ஜியம் முடிந்திருந்தது. ரஜினிக்காக எழுதிய ரஜினி ரோலில் நடித்து பெயர் பெற்ற ராஜேந்தர் அப்போது நாயகப்பதவியிலிருந்து இறங்கி இருந்தார்.
படையப்பாவின் பெருவெற்றியோடு மோனிஷா டி.ஆருக்கு ஆறுதல் வெற்றியை கொடுத்தது.
ரஜினி நடித்த 'Blood stone' படத்தை 88ல் சிம்புசினி ஆர்ட்ஸ் சிட்டி, என்.எஸ்.ஸி ஏரியா வினியோகித்தது. அதில் டி.ஆருக்கு நஷ்டம் ஏற்பட்டது துரதிர்ஷ்டமான விஷயம்.
பல வெளிப்படங்களுக்கு இசையமைத்த டி.ஆர் ரஜினிக்காக 'கூலிக்காரன்' படத்துக்கு இசையமைப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரோ தாணுவிடம் விஜய்காந்தை கை காட்டி ஒதுங்கி விட டி.ஆர் இசையில் நடிக்காமலும் போய்விட்டது.
அதை இப்போது கூலியில் டி.ஆர் பாடலில் ரஜினி நடித்து நிறைவை அடையச்செய்யும் விஷயம் நடக்கலாம்...
பி.கு: இருவரும் உறவினராக வாய்ப்பிருந்ததாகவும் பின்பு மாறிப்போனதாகவும் கிசுகிசுக்கப்பட்டாலும், ஒய்.ஜி.எம்-மதுவந்தி-சாவித்ரிமகள் விஜயசாமுண்டீஸ்வரி-ஜெமினி-புஷ்பவள்ளி மகன்-குட்டி பத்மினி அக்கா-உஷா ராஜேந்தர் வழியாக இருவரும் உறவினர்கள் தாம் என வெறொரு பதிவே எழுதலாம்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications