பாகுபலி படத்தை போல் தமிழ் படம் ரூ 1000 கோடி வசூலை அள்ளவில்லையா? உண்மை என்ன?
சென்னை: பாகுபலி படத்தை போல் தமிழ் படம் ரூ 1000 கோடி வசூலை அள்ளவில்லை என பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞானம் முதல் அன்பாலயா பிரபாகரன் வரை செய்த சாதனைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 1000 கோடி தமிழ்ப் படம் அடிக்கவில்லை என ரசிகர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
'பாகுபலி' படத்தின் தயாரிப்பாளர்கள் ஷோபு மற்றும் பிரசாத் தேவினேனி. இதில் ஷோபு புகழ்வாய்ந்த இயக்குநர் கே.ராகவேந்திரராவ் அவர்களின் மருமகன். அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த அவர் நண்பர் பிரசாத்துடன் இணைந்து Arca media என்கிற கம்பெனியை தொடங்குகிறார்கள். முதலில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை வழங்கி வந்த அவர்களது கம்பெனி, திரைப்படத் துறைக்குள் நுழைகிறது.
அப்படி முதலில் தயாரித்த படம் 'பல்லகிலோ பெல்லிகூத்துரு'. சுசித்ரா சந்திரபோஸ் என்கிற டான்ஸ் மாஸ்டர் பிராம்மானந்தம் அவர்களிடம் ஒரு கதை சொல்ல அவருக்கு பிடித்துப்போய் தன் மகன் ராஜாகௌதம் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ராகவேந்திரராவ் மூலம் மருமாகன் ஷோபுவின் கம்பெனி தயாரிக்க வெளிவருகிறது.
இந்த தயாரிப்புக்கு முன்பே அவர் 2001ல் முதலில் அட்வான்ஸ் கொடுத்தது ஒரு இளம் இயக்குநருக்கு. ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்கிற என்கிற படத்தில் பிஸியாக இருந்த அந்த இளைஞரிடம் அட்வான்ஸ் கொடுத்த போது ஷோபுவுக்கே தெரியாது தாம் ஒரு சரித்திரம் படைக்கப்போகிறோம் என. முதல் படம் முடிந்து அடுத்து 'வேதம்' படத்தின் கதை பிடித்துப்போக அதை தயாரிக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மஞ்சு மனோஜ் என வேதம் பொறி பறக்க பெரு வெற்றி பெறுகிறது. தமிழில் சிம்பு நடிக்க தெலுங்கு அளவுக்கு போகவில்லை.
இந்த சமயத்தில் ராஜமௌலிக்கு அட்வான்ஸ் கொடுத்து பத்து வருடம் நெருங்கப்போகிறதென சந்திக்க ராஜமௌலி 'மரியாதை ராமண்ணா' கதையை சொல்லி அதை தானே தயாரிக்க இருப்பதாக சொல்கிறார்.
ஷோபுவோ தன் அட்வான்ஸ் மௌலியிடம் இருப்பதை சொல்லி 'மரியாதை ராமண்ணா'வை தங்கள் கம்பெனிக்கு தயாரிக்க கேட்கிறார். நீண்ட நாட்கள் யோசனைக்குப்பிறகு ராஜமௌலி ஒத்துக்கொள்கிறார். Our hospitality என்கிற Buster keatonனின் ஊமைப்படத்தை தழுவி எடுத்த மரியாதை ராமண்ணா பெரிய ஹிட் படமானது.
ராகவேந்திரராவின் மகன் இயக்குந ர் அவதாரம் எடுத்த 'அனாகனாக ஒரு தீருடு' படத்திலும், 'பாஞ்சா' என்கிற பவன் கல்யாண் படத்திலும் இணை தயாரிப்பாளர்களாக இணைகிறார்கள்.
மரியாதை ராமண்ணா சமயத்திலேயே பிரபாஸை வைத்து படம் எடுக்க பேசுகிறார்கள் ராஜமௌலியும், ஷோபுவும். 2015ல் படம் வெளியாகிறது. படம் இந்தியா முழுக்க பேசப்படுகிறது. முதல் காரணைம் அதன் பிரம்மாண்டம் தான். அதற்கு ஷோபுவுக்கும், பிரசாத்துக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இரண்டாவது பாகத்தை கில்லி மாதிரி சொல்லி அடித்து ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியா முழுக்க அள்ள காரணம் ஷோபுவும்-ராஜமௌலியும் தான்.
படத்தின் வசூல் மட்டுமல்லாது பாகுபலி கேம்ஸ், டாய்ஸ், புத்தகம், அனிமேஷன் சீரிஸ் என கல்லா கட்டியது தனி கணக்கு.
இரண்டாயிரம் கோடிக்கு மேல் இரண்டு படங்களில் வசூல் கொட்டோ கொட்டென்று கொட்டிய பிறகு ஷோபு தயாரித்தது ஒரே படம் தான். 'யக்ஷிணி' என்கிற படத்தை தயாரித்ததோடு, இரண்டு படங்களில் இணை தயாரிப்பாளராக சேர்ந்ததோடு சரி. ஆயிரம் கோடி வசூல் வந்தாலும் என்ன செய்வார்கள்?.
அழகாக அதை வேறு முதலீடுகளில் இன்வெஸ்ட் செய்து விட்டு ஒதுங்கி விடுவார்கள். ஷோபு மாதிரி. கொஞ்சமாக வசூலை பார்ப்பவான் திரும்ப திரும்ப வேறு படங்களை எடுப்பான். திரையுலகம் செழிக்கும்.
இரண்டே திரைப்படங்களில் 1000 கோடிகளுக்கு அருகில் இந்திய மக்களின் பணத்தை இரண்டு தயாரிப்பாளர் கொண்ட குழு அள்ளிச்சென்றிருக்கிறது என்பதை என்ன சொல்வது? இது தான் இந்தியா. கலைஞானம் என்கிற தயாரிப்பாளர் சிறிய தயாரிப்பாளரானாலும் பத்து படங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்.
முக்தா சீனிவாசன் சகோதரர்கள் ஐந்து லட்சத்துக்கு படம் எடுத்து மேலே 75000 கிடைத்தால் போதுமென விற்று விட்டு திரும்ப திரும்ப எடுத்திருக்கிறார்கள். துணை நடிகராகவும், விநியோகஸ்தராகவும் இருந்த அன்பாலயா பிரபாகரன் ஆறேழு படங்கள் எடுத்திருக்கிறார்.
இவர்களெல்லாம் சிறிய லாபம் கிடைத்தாலும் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்திருக்கிறார்கள். 1000 கோடி யார் அடித்தாலும் அந்த தயாரிப்பாளர் ஒரு சின்னப்படம் எடுக்கப் போவதில்லை. அதனால் யாருக்கும் வாழ்வும் கிடைக்கப் போவதில்லை.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications