சொல்லட்டுமா, சொல்லட்டுமா.. இசைஞானி அலம்பல்? ரஜினியை சாடிய கிருஷ்ணமூர்த்தி! தாய் மூகாம்பிகை தந்த ஹிட்
சென்னை: நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவர் மீதும் மக்கள் வைத்திருந்த மரியாதையை அவர்களே தாழ்த்திக் கொண்டனர் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி காட்டமான சில விஷயத்தை சொல்லியிருக்கிறார். அது என்ன தெரியுமா?

இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், ரஜினி பேசுகையில், ஜானி படத்தின் ரெக்கார்டிங்கின் போது, இளையராஜா அரை பாட்டில் பீர் அடித்து ஆட்டம் போட்டது, நடிகையர் குறித்த கிசுகிசுக்களை கேட்டது பற்றி கலகலப்பாக கூறியிருந்தார்..
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.. வயது முதிர்ந்த ரஜினிகாந்த், அரசு விழாவில் இப்படியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்..
ஒவ்வொரு மேடையிலும் ரஜினி இப்படியெல்லாம் தேவையற்ற பேச்சுகளை பேசி வருகிறார். கூலி இசை வெளியீட்டு விழாவில்கூட, சவுபினை வழுக்கை தலை என்று கூறியிருந்தார்.. இப்போது முதலமைச்சர் முன்பு, பீர் பாட்டில் குறித்து பேசியிருக்கிறார். 83 வயது கலைஞனை இப்படியா தரம்தாழ்ந்து பேசுவது? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்..
தாய் மூகாம்பிகை படம் ஹிட்
அதேபோல சோஷியல் மீடியாவிலும் இதுகுறித்த விவாதங்கள் வலம் வருகின்றன.. BWTamil 360 யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "தாய் மூகாம்பிகை படம் வெளியாகி பாடல் ஹிட்டான பிறகு, இளையராஜா அனைவரையும் ரயிலில் தாய் மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் சென்று அந்தப் பாடலை பாடினார்.
அதன்பிறகு தான் இளையராஜா குடிப்பதையே நிறுத்தி விட்டு, தன்னுடைய தோற்றம் என அனைத்தையும் மாற்றிக்கொண்டார்.
அனைவருக்கும் இளம் வயது விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சிலாயிப்பு இருக்கத்தான் செய்யும், அப்படித்தான் ரஜினி பேசியதை கேட்டு இளையராஜா சற்று தடுமாறிவிட்டார். ரஜினி, இளையராஜாவிடம் சிம்போனி பற்றி கேட்டு இருந்தால் அது மிகப்பெரிய விஷயமாக வந்திருக்கும். ஆனால், இசைவெளியீட்டு விழாவில் பேசுவது போல ஒரு அரசியல் விழாவில் ரஜினி பேசியது தவறு, ரஜினிக்கு எப்போதுமே இதே வேலைதான்" என்று குபேரன் காட்டமாக கூறியிருக்கிறார்
காங்கிரஸ் கட்சி கண்டனம்
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தரப்பிலும் ரஜினிகாந்த் பேச்சுக்கு கண்டனம் கிளம்பியிருக்கிறது.. இது தொடர்பாக அக்கட்சியின் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் அரசு விழாவில், மதுவுக்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வர், தனக்காக ஒரு விழா எடுக்கிறார்.. அதில் பெருமையாக பேசுவதை விட்டுவிட்டு, இளையராஜா, 'சொல்லிடவா சொல்லிடவா' என கேட்பதும், 'கூறுங்கள் கூறுங்கள்' என ரஜினி சொல்வதும் கொடுமை.
பெரிய அலம்பல் ஆட்டம்
'ரஜினி மைக்கை பிடித்து, இளையராஜாவின் மரியாதையை காற்றில் பறக்கவிட்டு விட்டார்.நானும், மகேந்திரனும் மது அருந்தினோம். அங்கு வந்த இளையராஜாவிடம், நீங்களும் போடுகிறீர்களா என கேட்டேன். அரை பாட்டில் பீர் குடித்த இளையராஜா, விடியற்காலை 3:00 மணி வரை, பெரிய அலம்பல் ஆட்டம் ஆடினார்.
சினிமா நடிகையரின் கிசுகிசுக்களை பற்றி கேட்பார். அந்த பேச்சுகள் தான் அவருடைய பாட்டுகள் என ரஜினி கூறினார். அவர்கள் இருவர் மீதும் மக்கள் வைத்திருந்த மரியாதையை அவர்களே தாழ்த்திக் கொண்டனர்.
மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது என்பதை மறந்து, திரளாகக் கூடியிருந்த இடத்தில் இப்படி பேசுவது, சினிமா துறையில் உள்ளவர்கள் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications