Thalaivar 173: சிம்பு மறுத்த கதையில் ரஜினி! தலைவர் 173 படத்தில் இணைந்த பார்க்கிங் பட இயக்குனர்! கதை இதுதானா?
சென்னை: ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த ஊகங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தை 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராம்குமாருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு
பிரியா எதிர்பார்ப்போடு இருந்த தலைவர் 123 வது படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு பிறகு ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்ட ரஜினி, ராம்குமார் சொன்ன கதையை டிக் அடித்திருப்பதாகத் தெரிகிறது. இப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷூட்டிங் துவங்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காலேஜ் கேங்ஸ்டர் கதை
இது காலேஜ் பின்னணியில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதை என்றும், பேராசிரியராக உள்ளே போகும் ரஜினி என்ன செய்கிறார் என்பதுதான் திரைக்கதை என்றும் சொல்லப்படுகிறது. இந்த கதையை ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிம்புவை வைத்து எடுக்க இருந்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விழா என நடந்தும் சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. இப்போது அந்த கதையைத்தான் ரஜினிக்கு தகுந்த மாதிரி மாற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இயக்குநரின் சம்பளம்
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய முதல் படமான 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 6 லட்சம் மட்டுமேயாம். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் 49-வது படம் பேசப்பட்ட போது அவருக்கு இரண்டு கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள்.
பத்து கோடி சம்பளம்
தற்போது ரஜினி படம் என்பதால் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் முன் வந்திருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாகும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுந்தர் சி. விலகிய காரணம்
ரஜினி நடிக்கவிருந்த முந்தைய படத்தை (தலைவர் 173) கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்குவதாக இருந்த நிலையில், திடீரென அவர் அதில் இருந்து விலகினார். இயக்குநர் சுந்தர் சி. இது குறித்து அறிக்கை வெளியிட்டு, "கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை" பகிர்கிறேன் என்று கூறி, "தவிர்க்க முடியாத சில காரணங்களால்" இந்தப் படத்தில் இணையவில்லை என்று உருக்கத்துடன் தெரிவித்தார். ரசிகர்களின் மன்னிப்பையும் கோரினார்.
ரமேஷ் கண்ணாவின் விளக்கம்
சுந்தர் சி.யின் நண்பரான நடிகர் ரமேஷ் கண்ணா அவர் விலகியதற்கான காரணத்தை பற்றி பேசும்போது, "சுந்தர் சி. முன்பே இரண்டு படங்களில் கமிட்டாகிவிட்டார் என்பது உண்மை. அந்த இரண்டு படங்களை விட்டுவிட்டுப் போனால் நன்றி கெட்டத்தனமாக இருக்கும் அல்லவா. பெரிய நடிகர் படம் கிடைத்துவிட்டதால் விட்டு சென்றதாகக் கூறுவார்கள் அல்லவா" என்று உணர்ச்சிப்பூர்வமாக சொன்னார். ரஜினி படம் சீக்கிரமாக வேண்டும் என்று கேட்டதால் காலதாமதம் தவிர்க்க சுந்தர் சி. விலகியதாகவும் கூறினார்.
சுந்தர் சி. விலகிய நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications