வைகோ சினிமாவுக்கு வந்திருந்தால் அவர்தான் சூப்பர் ஸ்டார்! ரஜினியையே மிரள வைத்தவர்! தம்பி ராமையா அதிரடி பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தம்பி ராமையா. ஒரு நடிகராக மட்டுமில்லாமல், 'ராஜாகிளி' போன்ற படங்களில் கதை எழுதி, இசையமைத்து, இயக்கியும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'முதல்பக்கம்' படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமா வட்டாரத்தில் மட்டுமில்லாமல், பொது நிகழ்ச்சிகளிலும் தனக்கென ஒரு தனி பாணியில் பேசக்கூடியவர் தம்பி ராமையா. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாடல் வெளியீட்டு விழாவில், அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துப் பேசிய கருத்துக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தம்பி ராமையா சினிமா வாழ்க்கையும், குடும்பமும்
தம்பி ராமையாவின் சினிமா வாழ்க்கை எளிதாக அமையவில்லை. ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் உதவி இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றினார். 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' போன்ற சில படங்களை அவரே இயக்கியும் உள்ளார். அவருடைய மகன் உமாபதி ராமையாவும் நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தம்பி ராமையா, ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு தந்தையாகவும் தனது மகனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். நகைச்சுவை நடிகராகப் பெரிதும் அறியப்பட்டாலும், 'மைனா', 'ஆடுகளம்', 'தனி ஒருவன்' போன்ற படங்களில் அவரது நடிப்புத் திறமை பாராட்டப்பட்டது.
யார் இந்த வைகோ
மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கியமான தலைவர். தனது ஆவேசமான, அழுத்தமான பேச்சுகளால் பிரபலமானவர். பேச்சாற்றலில் இவருக்கு இணை இவரே என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட வைகோவைப் பற்றிப் பேசிய தம்பி ராமையா, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு, "வைகோ போன்ற ஒரு ஆணழகன், சினிமாவில் கால் பதித்திருந்தால், அவர்தான் இன்றைக்குத் தென்னிந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்" என்று அதிரடியாகக் கூறினார். மேலும், "அவருடைய உயரம், கண் புருவம், கம்பீரம், மூக்கின் அழகு யாருக்கு இருக்கிறது? அமிதாப் பச்சன் கூட வைகோவிடம் யாசம் எடுத்திருக்க வேண்டும்" என்று புகழ்ந்தார். ஆனாலும், வைகோ சினிமாவை விட்டுவிட்டு அரசியலைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
ரஜினியை மிரள வைத்த வைகோ
தம்பி ராமையாவின் பேச்சில் மிக சுவாரசியமான பகுதி, வைகோ இளையராஜா குறித்துப் பேசிய சம்பவம்தான். "இளையராஜாவைத் தள்ளி வைத்துவிட்டு, கடந்த 40 ஆண்டுகால இசை வரலாற்றை யாராலும் பேச முடியாது. அப்படியொரு இசை மேடையில், கையில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல், வைகோ பேசிய பேச்சு, சூப்பர் ஸ்டார் ரஜினியையே மிரள வைத்துவிட்டது. ரஜினி ஆச்சரியப்பட்டுப் போனார்" என்று கூறினார்.
வைகோவின் அரசியல் மற்றும் சமூகப் பார்வையைப் பற்றிப் பேசிய தம்பி ராமையா, "அவருடைய பரிணாம வளர்ச்சியாக நான் அவருடைய மகன் தம்பி துரை வைகோவை பார்க்கிறேன். அவர் பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் வணங்குவேன் என்று பேசுகிறார்" எனப் புகழ்ந்து தள்ளினார். மொத்தத்தில், தம்பி ராமையாவின் இந்தப் பேச்சு, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications