அமைதிப்படை, ராஜிவ் காந்தி கொலை, திகு திகு சிபிஐ விசாரணை! "தி ஹன்ட்" வெப் சீரிஸ்! விமர்சனம்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்கு பிறகு நடைபெற்ற விசாரணைகளை அடிப்படையாக கொண்டு The Hunt - The Rajiv Gandhi Assassination Case director என்ற வெப் சீரிஸ் Sony Liv என்ற OTT தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஒரு பக்கம் பாராட்டையும், மறுபக்கம் சர்ச்சையையும் சேர்த்தே கிளப்பியுள்ளது இந்த சீரிஸ். அதேநேரம், ராஜிவ் காந்தி கொலைக்கு காரணமாக, அவர் மீண்டும் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்ப எடுத்த முடிவுதான் காரணம் என்று வெப் சீரிஸ் பதிவு செய்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் உருவானதற்குக் காரணம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சிங்கள பௌத்தர்களால் சிறுபான்மைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாகுபாடும் ஒடுக்குமுறையும்தான். சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்களவர்கள் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். 1970-களின் பிற்பகுதியிலிருந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், தன்னாட்சி அல்லது தனிநாடு கோரிப் பல தமிழ் போராளிக் குழுக்கள் தோன்றின.

இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் ஆழ்ந்த அனுதாபத்தால், 1970-களின் பிற்பகுதியிலிருந்து, தமிழ்நாடு அரசும், பின்னர் இந்திய அரசும், தமிழ் பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சி, பொருட்கள் மற்றும் நிதி உதவி அளித்தன.
1976-ல் தொடங்கப்பட்ட பிரபாகரனின் விடுதலைப் புலிகள், 1980-களின் தொடக்கத்தில் இலங்கையில் மிகவும் பலம் வாய்ந்த தமிழ் பிரிவினைவாதக் குழுவாக மாறினர். 1983-ல் விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவ ரோந்துப் படையைத் தாக்கியது, "கறுப்பு ஜூலை" கலவரங்களுக்கு வழிவகுத்தது. இதுவே இலங்கையில் இரண்டரை தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டுப் போரைத் தூண்டியது.
இந்தியாவின் தலையீடு
1983-ல் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, இந்தியா நேரடியாகத் தலையிட விரும்பவில்லை; பிரச்சனையைத் தீர்க்கவே விரும்பியது. ஆனால், 1987-ல் நிலைமை மாறியது. ஜனவரி மாதம், இலங்கை ராணுவம் முழு தமிழ் வடக்கு பகுதியையும் முற்றுகையிட்டது. இதனால் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இந்திய நிவாரணக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதைக் கண்ட பிரதமர் ராஜீவ் காந்தி, மிராஜ்-2000 போர் விமானங்களின் பாதுகாப்புடன் விமானப்படை போக்குவரத்து விமானங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தது. இருவரும் 1987 ஜூலை 29 அன்று இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இலங்கையின் ஒற்றுமையைப் பாதுகாத்தது. ஆனால், அரசுக்கு அதிக மாகாண சுயாட்சி வழங்கியது. அதேநேரம், தமிழ்ப் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளவும் கட்டாயப்படுத்தியது.

விடுதலை புலிகளை தவிர்த்த மற்ற போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும், அரசியல் ரீதியாக இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டனர். ஆனால் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, இலங்கைப் படைகள் வெளியேறிய தமிழ் பகுதிகளுக்கு இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பி வைத்தார் ராஜிவ் காந்தி. யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள பலாலியில் அதன் தலைமையகத்தை அமைத்தது. பெண்கள் மீது அவை அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்தன. The Hunt - The Rajiv Gandhi Assassination Case சீரிசிலும், தான் அமைதிப்படையில் இருந்ததாகவும், தனது முக்கிய நோக்கமே இலங்கையில் உணவு சாப்பிடுவது மற்றும் பெண்களுடன் வல்லுறவு வைப்பதுதான், என்று, ஒரு கதாப்பாத்திரம் பேசுவது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது.
போர்
இதனிடையே இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. மற்ற கிளர்ச்சிக் குழுக்களைப் போலல்லாமல், ஆயுதங்களை கொடுக்க மறுத்தனர். இலங்கை அரசும் இந்த ஒப்பந்தத்தால் முழுமையாக மகிழ்ச்சியாக இல்லை. "ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன... மக்கள், குறிப்பாக சிங்களப் பகுதிகளில், ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தனர்," என்று ரோஷினி எம். குணவர்தனே தனது கட்டுரையில் (1991) குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு விடுதலைப் புலிகள் தலைவர்களை இலங்கைப் படைகள் கைது செய்தன. இந்திய அமைதிப்படை மற்றும் இலங்கை ராணுவத்தின் கூட்டு காவலில் இருந்தபோது, அவர்கள் சயனைடு உட்கொண்டனர். இது புலிகளை பழிக்குப் பழிவாங்கத் தூண்டியது. கடைசியில், இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டது.
முதலில், வேகமான வெற்றியை இந்தி ராணுவம் எதிர்பார்த்தது. ராணுவத் தளபதி ஜெனரல் கே. சுந்தர்ஜி, புலிகளை "72 மணி முதல் ஏழு நாட்களில்" முடித்துவிடுவார் என்று ராஜீவ் காந்தியிடம் உறுதியளித்தார். ஆனால், அக்டோபர் நடுப்பகுதியில், இந்த நம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.
அக்டோபர் 12 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விடுதலைப் புலிகளின் உயர் தலைவர்களை வெளியேற்றும் வகையில் நடந்த ஹெலிகாப்டர் தாக்குதல், 36 இந்தியப் படையினரின் மரணம், ஒரு வீரரின் கைது, பலருக்குக் காயம் மற்றும் இந்திய ஹெலிகாப்டர்களுக்குச் சேதம் என பாதிப்பு அதிகரித்தது. அக்டோபர் 12 மற்றும் 13 க்கு இடையில், இந்திய அமைதிப்படை குறைந்தது 70 வீரர்களை இழந்தது, அவர்களில் பலரின் உடல்களை மீட்கவே முடியவில்லை.

அடுத்த 20 நாட்கள், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. அக்டோபர் இறுதிக்குள், சுமார் ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ஆனால், இந்திய அமைதிப்படையும் 319 வீரர்களை இழந்தது. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் காயமடைந்தனர். யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டாலும், விடுதலைப் புலிகளின் முக்கிய போர் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வடக்கில் உள்ள வன்னி காடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.
அதன் பிறகு இரண்டரை ஆண்டுகள், சண்டை நீடித்தது. விடுதலைப் புலிகள் கொரில்லா தந்திரங்களில் திறமையானவர்களாக இருந்தனர். மற்றும் இலங்கை மற்றும் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக அவர்கள் கடும் கோபத்தோடும் இருந்தனர். எனவே அவர்கள் தாக்குதல் சரமாரியாகவும், கடுமையாகவும் இருந்தது. போர் முடிவில்லாமல் இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தன.

இந்திய அமைதிப்படையின் இழப்புகள்
1990-ல் கடைசி இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது, 32 மாதங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் சுமார் 1,165 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்திருந்தனர். மேலும், 5,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழந்தனர். மொத்தமாக இந்திய அமைதிப்படை மற்றும் அதற்கு உதவிகரமாக இருந்தவர்கள் என 8,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
விளைவுகள்
இந்தியப் படைகளின் வெளியேற்றம் 1989-ல் தொடங்கியது, ராஜீவ் காந்தி வி.பி. சிங்கிடம் தேர்தலில் தோற்றார். இலங்கைத் தலையீடு தேர்தல் முடிவில் ஒரு முக்கிய பங்கு வகித்தது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவிற்கு, இந்த நிகழ்வு ஆழமான காயங்களை ஏற்படுத்தியது.

இலங்கையில், இந்தியத் தலையீடு செல்வாக்கற்றதாக இருந்தது. இது ராஜிவ் காந்தியின் மீதான இந்திய மக்களின் மதிப்பை குறைத்துவிட்டது. மேலும், இந்திய அமைதிப்படை சட்டவிரோத கடத்தல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது. சிங்கள மக்களிடையேயும், 80,000 பேர் கொண்ட இந்தியப் படையின் நீண்டகால இருப்பு வெறுக்கப்பட்டது. இதனால், இலங்கை அரசு 1989-ல் புலிகளுக்கு ஆயுதம் வழங்கத் தொடங்கியது, இந்திய அமைதிப்படை வெளியேறுவதை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த வேலையை இலங்கை செய்தது என்றால் நம்ப முடிகிறதா. அவர்களுக்கு புலிகளை விட இந்திய படைதான் அச்சுறுத்தலாக தென்பட்ட காலகட்டமாக அது இருந்தது.
ராஜீவ் காந்திக்குப் பிறகு 1989-ல் ஆட்சிக்கு வந்த வி.பி. சிங் அரசாங்கம் குறுகிய காலம் நீடித்தது. 1991-ல், இந்தியா மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால், ராஜீவ் இலங்கை உள்நாட்டுப் போரில் மீண்டும் நுழைய திட்டம் வைத்திருந்தார். 1990-ல் சண்டே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்க வைத்துவிட்டு சரணடையச் செய்ய இந்திய அமைதிப்படையை இலங்கை அனுப்புவேன் என்று கூறினார்.
இது பிரபாகரனுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பியதற்காக ராஜீவ் காந்தி மீது அவர் ஏற்கனவே கடும் வெறுப்பைக் கொண்டிருந்தார். எனவேதான் தேர்தலுக்கு முன்பே ராஜிவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. The Hunt - The Rajiv Gandhi Assassination Case வெப் சீரிசிலும் இதுபோன்ற காட்சி ஒன்று உள்ளது.

புலிகள் எதற்கு அஞ்சாத தற்கொலைப் படையை நிர்வகித்து வந்தனர். அதைச் சேர்ந்த 22 வயதான கலைவாணி ராஜரத்தினத்தை (தாணு) ராஜீவ் காந்தியைக் கொல்ல அனுப்பினர் பிரபாகரன். குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி உட்பட, 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 பேர் காயமடைந்தனர். இந்த காட்சிகளும் வெப் சீரிசில் இடம் பிடித்துள்ளன. கொலைக்கு பிறகு சிபிஐ எப்படி விசாரணை நடத்தியது, சிவராசனை சுற்றி வளைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, உட்பட பல விஷயங்களை பதை பதைப்புடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்த வெப்சீரிஸ்.
ரவி பெலகரே போன்ற பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் அடிப்படையில், நாகேஷ் குக்குநூர் இயக்கியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் சமமாக எடுத்து வைக்க முயன்றுள்ளார் இயக்குநர். அப்போதைய பிரதமர் சந்திரசேகர் உட்பட பலரது உருவங்களை அப்படியே திரைக்கு கொண்டுவர உழைப்பை போட்டுள்ளார். 90களின் கால கட்டத்தையும் கண் முன்பு கொண்டுவந்துள்ளார். பிரபாகரன் கதாப்பாத்திரத்தை சரியாக அவர் சித்தரிக்கவில்லை என்பது உட்பட வேறு சில விமர்சனங்களும் வெப் சீரிஸ் மீது வைக்கப்பட்டாலும், தொய்வில்லாமல் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் நாகேஷ். தமிழ், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் இந்த வெப் சீரிஸ் சோனி லைவில் (Sony Liv OTT) பார்க்க கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications