ஆட்டம் காணும் அஸ்திவாரம்? லுங்கி, தொப்பியை கையிலெடுத்த விஜய்? டிட்டோ திராவிடர் கட்சிகள்? பிரபலம் நச்
சென்னை: மாற்று அரசியல் வேண்டும் என்று சொல்லிதான் விஜய் அரசியலுக்குள் வருகிறார்.. ஆனால், திராவிட கட்சிகள் செய்ததைதான் தானும் செய்வேன் என்றால், அதற்கு எதற்கு விஜய்? என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடும்.. அந்த எண்ணம் வந்துவிட்டால், அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்.. விஜய் விஜய்யாகவே இருக்க வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. அத்துடன், நேற்றைய தவெக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், நடந்த சம்பவம் குறித்தும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
"இப்படியொரு இப்தார் நோன்பு நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை.. எத்தனையோ தலைவர்கள் இப்தார் நோன்பு திறந்திருக்கிறார்கள். எங்கேயுமே தங்களுடைய கண்ணியத்தை அவர்கள் இழந்ததில்லை..
பொதுவாக இதுபோன்ற நோன்புகளுக்கு தலைவர்கள் வந்தால், அவர்களை வரவேற்று, சிறிய உரை நிகழ்த்த சொல்வார்கள்.. பிறகு, நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றுவிடுவார்கள்.. ஆனால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டதில்லை..

இதென்ன தேர்தல் பிரச்சாரமா
ஆனால், நேற்று விஜய் வந்தார்.. வரும்போதே தேர்தல் பிரச்சாரத்துக்கு வேனில் வருவது போல, கையை காட்டிக்கொண்டே தொப்பி வேற போட்டிருந்தார்.. தலைவா என்று, இஸ்லாமியர் அல்லாதவர்கள் எல்லாம் கூச்சலிட்டு, மசூதிக்குள்ளேயும் அவர்கள் புகுந்து விட்டார்கள்.,. பல இடங்களில் கண்ணாடிகள் உடைந்துவிட்டதாம்..
பல இஸ்லாமியர்கள் இதுகுறித்து வருத்தத்துடன் பேசுவது வீடியோவாகவும் வெளிவந்துள்ளது. சிலர் குடித்துவிட்டு வந்துவிட்டார்களாம்.. காலை முதல் மாலை வரை எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்கும்போது, இப்படி சம்பந்தமில்லாதவர்கள் நுழைந்து, அந்த இடத்தின் புனிதத்தையே மாசு படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?

மத நல்லிணக்கம் - இது தமிழ்நாடு
மதக்கலவரத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட வேண்டும் என்று எத்தனையோ முனைப்புகள் நடந்தாலும், அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சகோதரர்களாக நாம் அனைவரும் ஒன்றாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம்.
அந்தவகையில், அனைத்து மதத்தினரும் தனக்கு வேண்டும் என்று விஜய் நினைப்பது சரிதான்.. ஆனால், சாதாரண விஜய்யாகவே அவர் வந்துவிட்டு போயிருக்கலாம். ஏன் அடையாளத்தை மறைக்கணும்? தொப்பி, லுங்கியுடன் வரவேண்டிய அவசியம் இல்லையே..
விஜய், தீவிரமான கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரது அப்பாவே பல கோயில்களுக்கு போக ஆரம்பிச்சிட்டாரு.. இப்பகூட கும்பமேளாவில் அப்பா, அம்மா 2 பேருமே மூழ்கி எழுந்து வந்துள்ளார்கள்.. சாய்பாபா கோயில் கட்டியிருக்கிறார்கள். எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம் என்பதுபோல தாய், தந்தையர் உள்ளது போலவே, விஜய்யும் அந்த மனநிலைமையில் இருப்பதாகவே தெரிகிறது. அது நல்ல விஷயம்தான்.

விசிலடிச்சான் குஞ்சுகளா
ஆனால், ஒரு இந்து கோயிலுக்கு போகும்போது, விஜய் காவி வேட்டி கட்டிக் கொண்டு போகிறாரா? அப்பறம் ஏன் இங்கே மட்டும் லுங்கி, தொப்புடன் வேஷதாரியாக மாறணும்? காலம் காலமாக மற்றவர்கள் செய்யும் ஏமாற்று வேலையை விஜய்யும் செய்யணுமா? எம்மதமும சம்மதம் என்ற மனநிலைமையை விஜய் ஏற்படுத்துவது நல்ல விஷயம் என்றாலும், ரசிகர்களை முதலில் விஜய் பக்குவப்படுத்த வேண்டும்.. இன்னமும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருக்கிறார்களே? என்ற சந்தேகத்தைதான் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.
துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக விஜய் சித்தரித்து நடித்திருந்தார். அதற்கு பரிகாரமாக, இஸ்லாமியர்களை புனிதப்படுத்தும் விதமாக விஜய், ஒரு படத்தில் நடிப்பார் என்று அவரது அப்பா ஒருமுறை சொல்லியிருந்தார்.. அப்படின்னா அந்த படம்தான் நேற்று நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியா? என்று பலரும் சோஷியல் மீடியாவில் கேட்க துவங்கிவிட்டார்கள்.

முதலில் ஒழுக்கம், கண்ணியம் தேவை
விஜய்யின் நோக்கம் தவறு இல்லை என்று சொல்லவில்லை.. அவர் அவராகவே இருக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆசை.. பயிற்சி வகுப்புகளை வைத்து ரசிகர்களை திருத்த வேண்டும். தலைவா என்று கத்தும் ரசிர்களை அனுமதிக்கவே கூடாது. அப்படி கூப்பாடு போடும் 10 பேரையாவது மன்றத்திலிருந்து நீக்கினால், அடுத்தமுறை இதுபோன்ற நிகழ்வுகளில் ஒழுக்கமாக நடந்து கொள்வார்கள்.
அதேபோல, எல்லா நிகழ்வையுமே அரசியலுடன் முடிச்சு போடக்கூடாது. தவெக தொடர்பாக வந்து செல்வதாக இருந்தால், தொண்டர் பலத்துடன், விஜய் உற்சாகத்துடன வரலாம். ஆனால், ஒரு மதம் தொடர்பாக வரும்போது, அதற்கான கண்ணியத்தை முதலில் விஜய்யிடமிருந்து தான் துவங்க வேண்டும்.
அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்
யாரிடமும் சொல்லாமல், நேற்று காரில் கிளம்பி வந்து அமைதியாக நோன்பு முடித்துவிட்டு போயிருக்கலாமே? எதற்காக திறந்த வெளி பிரச்சார காரில், கையை ஆட்டிக் கொண்டே வரணும்? இது வருத்தமாக இருக்கிறது.
மாற்று அரசியல் வேண்டும் என்று சொல்லிதான் விஜய் அரசியலுக்குள் வருகிறார்.. ஆனால், திராவிட கட்சிகள் செய்ததைதான் தானும் செய்வேன் என்றால், அதற்கு எதற்கு விஜய்? என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடும்.. அந்த எண்ணம் வந்துவிட்டால், அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications