மூப்பனாரிடம் சொத்து ஆவணங்களுடன் நின்ற விஜயகாந்த்.. "விஜி சாப்பிடுறியா".. கண்ணீர் வழிய உறைந்த கேப்டன்
சென்னை: தனலெட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம், விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை சுமார் 150 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.. இலவச கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜயகாந்த் இந்தக் கல்லூரியை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கல்லூரி நிதி நெருக்கடியால் கை மாறியிருப்பது, விஜயகாந்தின் ரசிகர்களையும் அக்கட்சி தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, விஜயகாந்த் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்தின்போதும், கல்வி உதவி கேட்டு ஏராளமானோர் விஜயகாந்த்திடம் செல்வார்கள்.. அத்தனை பேருக்கும் விஜயகாந்த், கல்விக்கான உதவியை வழங்கி வந்தார்..

ஒருகட்டத்தில் நாமே கல்வியை தந்தால் என்ன? இலவசமாக கல்வியை தர முடியாது என்றாலும், நாமே கல்லூரியை தொடங்கி, அதில் குறைந்த கட்டணத்தில் படிப்பை தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
நண்பர் ராவுத்தர்
நண்பர் ராவுத்தரிடம் ஒருநாள் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது, என்ஜினியங் கல்லூரி ஆரம்பிக்கலாமா? கட்டணம் குறைவாக பிள்ளைகளை படிக்க வைக்கலாமே? என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.. பிறகு விஜயகாந்த், ஆனால் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? இனி அடுத்து நடிக்க போகும் நாலஞ்சு படத்துக்கு முழு சம்பளத்தையும் கேட்கலாமா? அப்போதுகூட பணம் போதாதே? என்று யோசித்தார் விஜயகாந்த்.
அதற்கான இடத்தை பார்க்க சென்றபோது, மாமண்டூரில் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கு மிகப்பெரிய விலையை சொன்னார்கள்..
மூப்பனார் ஐயா
தன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்பதால், பலரிடம் சென்று உதவி கேட்டுப்பார்த்தார்.. தன்னுடைய வீட்டு பத்திரம், தோட்டத்து பத்திரத்தை தந்தெல்லாம் அந்த இடத்தை வாங்க முயன்றார்.. அப்போதும் முடியவில்லை..
அதற்கு பிறகுதான் ராவுத்தர், மூப்பனாரை சென்று சந்திக்கலாம், பலருக்கு உதவிசெய்து கொண்டிருப்பவர்.. இதுபோன்ற கல்வி விஷயத்தில் நிச்சயம் உதவுவார்.. நம்மிடமுள்ள ஆவணங்களை அவரிடம் தந்து உதவி கேட்போம்:" என்று சொல்லியிருக்கிறார்.
உடனே விஜயகாந்த்தும், ராவுத்தரும், மூப்பனார் வீட்டுக்கு காலை 7 மணிக்கு சென்றுள்ளனர்.. அப்போது மூப்பனார் டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.. விஜயகாந்த்தை பார்த்ததுமே, வா விஜி, டிபன் சாப்பிடு என்று சொல்லி இருவருக்கும் டிபன் தந்திருக்கிறார்.. அப்போதுதான் டிபன் சாப்பிட்டுக் கொண்டே வந்த விஷயத்தை விஜயகாந்த் சொல்லி உள்ளார்.
சொத்து ஆவணங்கள்
தன்னுடைய நோக்கத்தை சொல்லி, தன்னிடமுள்ள ஆவணங்களை தந்து பண உதவி வேண்டும், வட்டியில்லாமல் கடனாக தந்தால், விரைவில் அடைத்துவிடுவதாகவும் சொல்லி உள்ளார். உடனே மூப்பனார், உடனடியாக வேறு நிகழ்ச்சிக்கு செல்லவிருந்ததால், நாளைக்கு காலையில் இதைப்பற்றி பேசுவோம் என்று கூறியிருக்கிறார்.
அங்கிருந்து கிளம்பிவரும்போது விஜயகாந்த் ராவுத்தரிடம், "ஒருவேளை, நாம் பணம் கேட்டதை ஐயா தவறாக நினைத்து கொண்டாரா? நாளைக்கு பேசுவதாக சொல்றாரே?" என்று கேட்டாராம்.. எனினும், மறுநாள் காலையிலும் விஜயகாந்த்தும், ராவுத்தரும் மூப்பனார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
டாக்குமெண்ட்கள்
என்ன கையில் டாக்குமெண்ட்டுடன் வந்திருக்கீங்க? என்று விஜயகாந்த்திடம் கேட்ட மூப்பனார், அந்த டாக்குமெண்ட்களை வாங்கிக்கொண்டாராம்.
உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து, அங்குள்ள சூட்கேஸ்களை எல்லாம் விஜயகாந்த் காரில் ஏற்று என்றாராம்.. அத்தனை பெட்டிகளிலும் பணம் இருந்தன.
கண்ணீர் விட்ட விஜயகாந்த்
பிறகு விஜயகாந்திடம், "கல்லூரிக்கு தேவையானதை தந்துள்ளேன், இதற்கு மேலும் வேண்டுமென்றால் என்னிடம் வந்து கேள். ஏழை மாணவர்களுக்கு கல்லூரியில் சலுகை கட்டணத்தில் உதவ நினைக்கிறாய்.,. அதில் என்னுடைய பங்கு இருக்கக்கூடாதா? அதுக்கு எதுக்கு டாக்குமெண்ட்டுகள்? நான் என்ன வட்டிக்கு தரும் மார்வாடியா? என்று சொல்லி, அந்த டாக்குமெண்ட்களை எல்லாம் விஜயகாந்த்திடமே திருப்பி தந்துட்டாராம் மூப்பனார்..
இதைக்கேட்டதும் கண்ணீர் வடித்து நின்றார் விஜயகாந்த்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications