அச்சாரத்தை போட்டாச்சு.. அரசியலில் நுழையும் நடிகர்? சாலிகிராமம் வாசல்ல நின்றாரே விஜயகாந்த்: பிரபலம்
சென்னை: வாரம் 500 ரசிகர்கள் என்று மொத்தம் 25 வாரங்களுக்கு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார்.. இதற்காக ஸ்டுடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.. ஜூலை 27ம் தேதி முதல் தொடர்ந்து 25 ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசவே அந்த ஸ்டுடியோ புக் செய்யப்பட்டுள்ளதாம்.. ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை தந்து வந்தாலும், தனுஷின் இந்த அதிரடி நடவடிக்கை சினிமா வட்டாரத்தின் கவனத்தை பெற்று வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுபைர், "நடிகர்களுடன், ரசிகர்கள் போட்டோ எடுத்து கொள்வது நல்ல விஷயம்.. விஜயகாந்த் சென்னையில் இருந்தால், ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களுக்காகவே ஒதுக்கிவிடுவார்.. தமிழ்நாடு முழுவதிலிருந்து ரசிகர்கள் திரண்டு வரும்போது,

சாலிகிராமம் வீட்டில் ரசிகர்கள்
சாலிகிராமம் வீட்டின் வெளியே விஜயகாந்த் நின்று, அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வார்.. இப்படி கடைசி நபர் போட்டோ எடுக்கும்வரை, 6 மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டேயிருப்பார்.. வந்திருக்கும் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு அனுப்புவார்..
அப்போதெல்லாம் அவர் அரசியல் கட்சியை துவங்கவில்லை.. இதனை தன்னுடைய ரசிகர்களுக்காக ஆத்மார்த்தமாக செய்தார். அதேபோல, தன்னுடைய மன்றத்தில் ஒரு டீம் வைத்திருந்தார்.. தனக்கு வரும் கடிதங்களில், கல்வி உதவி, கல்யாண உதவி, மருத்துவ உதவி கேட்டு வந்தால், அதனை பரிசீலனை செய்யவே அந்த டீமை வைத்திருந்தார். நிதி கேட்டு கடிதம் எழுதியவர்களின் முகவரிக்கு, நேரடியாகவே இந்த டீம் சென்று விசாரித்து உதவி செய்வார் விஜயகாந்த்..
விஜயகாந்த் சூப்பர்
இதெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல், தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக செய்தார்.. இதற்கு பிறகுதான் கட்சியையே துவங்கினார் விஜயகாந்த்.
எனவே ரசிகர்களை சந்திப்பது என்பது நடிகர்கள் செய்ய வேண்டிய கடமையாகும். எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகும், அவரை சந்திக்க பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வருவார்கள்.. ஒரு ஊருக்கு செல்கிறார் என்றாலும்கூட, எம்ஜிஆரை பார்க்க, சாலையின் 2 பக்கம் கூட்டம் குவிந்துவிடும்.. எனவே, தன்னுடைய கார் கண்ணாடியை திறந்துவிட்டு, காரை மெதுவாக ஓட்ட சொல்லி டிரைவரிடம் சொல்வாராம் எம்ஜிஆர்.
நடிகர் சூர்யா - திருமண மண்டபம்
ஆனால் சமீபகாலமாகவே இந்த பழக்கம் குறைந்துவிட்டது.. இன்றுள்ள இளம் நடிகர்கள், தங்களது ரசிகர்களை சந்திப்பதும் இல்லை..
ஆனால், நடிகர் சூர்யா, சமீபத்தில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, ரசிகர்களை சந்தித்தார்.. சூழலும், தன்னுடைய மன்ற நிர்வாகிகளை ஊர் ஊராக சென்று சந்தித்து பேசி வருகிறார்.. அதுபோலவே, இப்போது தனுஷ்., சென்னையில் ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்து, 25 ஞாயிற்றுக்கிழமையும் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.. இது சாதாரண விஷயம்தான். அதுக்காக தனுஷ் அரசியலுக்கு வருகிறார், ரஜினி, விஜய் வரிசையில் வரப்போகிறார் என்றெல்லாம் புரளிகள் பரவி வருகின்றன.
ஆனால், இத்தனை வருட காலமும் ரசிகர்களை சந்திக்காத தனுஷ், இப்போது 25 வாரங்களுக்கு சந்திக்க முடிவு செய்துள்ளார் என்றால், அதற்கு காரணம் இல்லாமல் இருக்காது. ஹாலிவுட், இந்தி, உள்ளிட்ட படங்களில் பிசியாகி வருகிறார்.. அந்தவகையில், 2030ம் ஆண்டுவரை தனுஷ் பிஸியாகவே இருப்பார் என்கிறார்கள்.. அதனால் அவரது அரசியல் பற்றியெல்லாம் இப்போது கணிக்க முடியாது.
டேமேஜ் ஆன பெயர்
எனினும், தன்னை பற்றி சமீபகாலமாகவே சோஷியல் மீடியாவில் தவறான செய்திகள் வருவதாலும், பெயரை டேமேஜ் செய்வதாலும், எதிர்மறை விமர்சனங்கள் உலவி வருவதாலும், அதற்கெல்லாம் பதிலடி தருவதற்காகவே, இதுபோன்று ரசிகர்களை சந்திக்க அவர் முடிவுசெய்திருக்கலாம்.
ஒருவேளை எதிர்காலத்தில் சினிமா ஆசையெல்லாம் முடிந்துவிட்ட பிறகு, அரசியல் ஆசை வரலாம், அதற்கான விதையை போட்டு வைப்போம் என்றுகூட, தனுஷ் முடிவெடுத்திருக்கலாம் என்று கருத்து கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications