ராதிகா நடித்த சிப்பிக்குள் முத்துவுக்கும் நல்லவனுக்கு இப்படி ஒரு தொடர்பா?
சென்னை: நடிகை ராதிகா, கமல் நடித்த சிப்பிக்குள் முத்து படத்திற்கும் நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறதே தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஸ்வாதி முத்யம்... தமிழில் சிப்பிக்குள் முத்து... ஒரு படம் படமாக திரைக்கு முன்னால் உருவங்களாக இல்லாமல் நம்மை நேரிலேயே கூட இருந்து பார்ப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துமென்றால் அது ஸ்வாதி முத்யம்.

கள்ளமும், வஞ்சமும் நிறைந்த சமுதாயத்தில் எல்லோருக்கும் நன்மையை பற்றியே நினைக்கும், ஆள் வளர்ந்தும், மூளை வளராத சிவய்யா என்கிற கதாபாத்திரமாகவே கமல் வாழ்ந்திருப்பார்.
சாகரசங்கமம் பெங்களூரில் 511 வது நாள் விழாவில் கலந்து கொண்ட கமல், கே.விஸ்வநாத், தயாரிப்பாளர் எடித.நாகேஸ்வரராவ் அன்று இரவு ஹோட்டலில் இருந்த போது இந்த சிவாவின் பாத்திரத்தை பற்றி சொல்ல கமல் உற்சாகமாகி நடிக்க ஒப்புக் கொண்டார்.
பிறந்தது சுவாதி முத்யம் என்கிற காவியம். சுவாதி முத்யம் என்றால் சிறந்த முத்து என நினைக்கிறேன். படத்தில் சிவா என்கிற கமல் அதுவும் டிஸ்கோ ஆடிக் கொண்டிருந்த அக்காலத்தில் கை, கால்களை கட்டிப் போட்டு அழகாக தன் உடல் மொழியாலும் மானரிஸங்களாலும் ராதிகாவை மட்டுமல்ல. நம் மனதையும் வென்று விடுவார்.
சுவ்வி சுவ்வி (துள்ளி துள்ளி) பாடலில் அவர் ஆடும் நடனம் அடடா... அழகு... படம் தொடங்கியதும் முதல் காட்சி. அதிகாலை கதவைத் திறந்து பால் குப்பியை எடுக்க கமல் வெளியே வருவார். அப்போது அவர் வீட்டில் கோலம் மட்டுமே போடப்பட்டிருக்கும். பக்கத்து வீட்டில் கோலத்தோடு சாண உருண்டைகளோடு பூக்கள் வைக்கப்பட்டிருக்கும். கமல் தன் வீட்டுக் கோலத்தில் ஒன்றுமேயில்லையென அந்த சாண பூவில் நடுநாயகமாக இருக்கும் ஒரு சிவப்பு பூ சாண உருண்டையை எடுத்துவிட்டு பின் கூடவே மஞ்சள் பூவோடு ஒன்றையும் கொண்டு வருவார்.
இந்த காட்சியின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
கே.விஸ்வநாத்தை காண அவர் நண்பர் ஒருவர் வந்தார். கே.விஸ்வநாத்திடம் 'அற்புதமாக முதல் காட்சியை வடிவமைத்திருக்கிறீர்கள். அந்த ஒரே ஷாட்டில் படத்தின் முழுக் கதையையும் சொல்லி விட்டீர்களே". விஸ்வநாத்துக்கோ ஒன்றும் புரியவில்லை.
ராதிகாவையும், மகனையும் தன் வீட்டுக் கூடத்தில் வைத்து உயரிய மரியாதையை கொடுப்பதை தான் கோலத்தில் சாண உருண்டைகளை கொண்டு வந்து வைத்த ஷாட்டில் வைத்ததாக சொன்ன போது விஸ்வநாத்துக்கே ஆச்சர்யம். நாம் சாதாரணமாக வைத்த ஷாட்டில் இப்படி ஒரு கதையும் வந்தது தெய்வசங்கல்பம் என்கிறார் விஸ்வநாத்.
படத்தில் எல்லா கேரக்டர்களும் பாசிட்டிவாகவே போகும். தீபா, தீபாவின் கணவர், பாட்டி, முறைப்பெண், மாமாவின் புது மனைவி என சிவா தன் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் எல்லாம் சிவாவிடம் அன்பு செலுத்துவார்கள். ராதிகா தன் துயர்களை தன் மௌனம் மூலமாக நம்மிடம் கடத்தி அசத்தி விடுவார்.
தீபாவின் கணவராக நடிக்க தீர்மானித்தவர் வராத போது அந்த பாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரனை போடலாம் என தயாரிப்பாளர் எடித.நாகேஸ்வரராவின் மகன் எடித.ஸ்ரீராம் சொல்ல நாகேஸ்வரராவோ 'வேண்டாம்...நீயே நடி" என சொல்ல அவரே நடித்தார்.
படத்தில் ராதிகாவின் மகன் பாலசுப்ரமணியமாக நடித்து நம் மனதை கொள்ளை கொண்ட சிறுவன் கார்த்திக் வேறு யாருமல்ல. பழம் பெரும் வில்லன் நடிகர் காந்தாராவின் பேரன். கார்த்திக் இப்போது சாஃப்ட்வேர் என்னஜினியராக அமெரிக்காவில் இருக்கிறார். முதல் காட்சியில் வயதான கமலோடு வரும் குழந்தைகளில் அல்லு அர்ஜுனும் நடித்தார் என்பதும் சிறப்பு. மேலும் கமல் மருமகனாக அல்லு அரவிந்தின் மகன் பாபி, மருமகன் வெங்கடேஷ்வரனின் குழந்தைகள் தீபு, வித்யாவை நடிக்க அனுப்பி வைத்தார் அல்லு அரவிந்த்.
கமலின் பேத்தியாக நடித்த சுகந்தி கர்ணன் படத்தில் 'ஓப்பனாக' நடித்து காணாமல் போனார். படத்தில் ராதிகாவின் மாமனாராக நடித்த மேஜர் சுந்தர்ராஜனுக்கு முதல் தெலுங்கு படம். மேஜர் எடித.நாகேஸ்வரவின் நண்பர். சங்கராபரணம் படத்தை நாகேஸ்வரராவிடமிருந்து வாங்கி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது மேஜர் தான். இந்த படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு தந்த நாகேஸ்வரராவ் அவரே டப்பிங்கும் பேசினார். தமிழில் சிப்பிக்குள் முத்தாக ரிலீஸ் செய்ததும் மேஜர் தான்.
மேஜருக்கும் கமலுக்கும் என்ன வாங்கலோ கமல் தமிழ் டப்பிங் பேசவில்லை. எஸ்.பி.பாலுவே பேசினார்.
படத்தில் ராதிகா இறந்து போட்டோவாக வரும் புகைப்படம் ரஜினியின் 'நல்லவனுக்கு நல்லவன்' ஸ்டில் தான். சென்னை அருணாசலம் ஸ்டுடியோவில் வீடு செட்டானதால் அதை பயன்படுத்தினார்கள் போல. படத்தின் ராக ராஜாங்கம் இளையராஜா. ராமன் கதை கேளுங்கள் போன்ற ஹரிகதை காலட்சேபம் படத்தின் கதையோடும் உணர்வோடும் ஒட்டி வரும்.
வரம் தந்த சாமிக்கு போன்ற உணர்வான தாலாட்டு பாடல் இன்றைய இசையமைப்பாளர்களால் இசையமைக்க முடியுமா என தெரியவில்லை. படத்தில் தீபாவுக்கு முதுகு தேய்க்கும் போது பாடப்படும் 'பட்டு சீர தெஸ்தனானி'(பட்டுச்சேல தரேனுன்னு... தமிழில்) பாடலை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஸ்வநாத் எழுத அதற்கு டியூன் இட்டது யார் தெரியுமா? கமல் தான்.
கமல் டியூன் செய்து அதை கேஸட்டில் அவரே பாடி ரெக்கார்ட் செய்து அதை ஒலிக்க வைத்து தீபா வாயசைத்து நடிக்க வைத்து எடுக்கப்பட்டது. பின்னே தான் பாடல் பாடகி பாட ரெக்கார்டிங் செய்யப்பட்டது.
கமலிடம் இந்தப் படத்தை பற்றி கேட்ட போது அவர் சொன்ன ஒரு விஷயம். Tom hanks நடித்த Forest gump படம் அச்சு அசலாக இந்தப் படத்தை தழுவியே கேரக்டர்கள் எடுக்கப்பட்டு எடுத்ததாக சொன்னது தான்.
இதை வடக்கு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று எழுதியதாகவும் கே.விஸ்வநாத் சொல்கிறார். ஹாலிவுட்டும் இந்திய தழுவல்களை எடுக்கிறார்களே... மேலும் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட முதலும் கடைசியுமான தெலுங்கு படமும் இது தான். பல விருதுகளை பெற்ற ஸ்வாதி முத்யம் நூறாவது நாள் விழாவில் நடிகர் ராஜ்கபூர், சிரஞ்சீவி, முதலமைச்சர் என்.டி.ஆர் கலந்து கொண்டு புகழ்ந்தனர்.
கே.விஸ்வநாத் என்கிற இயக்குனரின் உணர்வூட்டும் சித்திரம் சுவாதி முத்யம். (இதை ஹிந்தியில் அனில்கபூர், விஜயசாந்தியை நடிக்க வைத்து 'ஈஸ்வர்' என எடுத்து பர்னீச்சரை உடைத்ததும் கே.விஸ்வநாத் தான்.கன்னடத்தில் கிச்சா சுதீப், மீனா நடிக்க துவம்சம் செய்யப்பட்டதும் உண்டு). எத்தனை கமல் படங்கள் பார்த்தாலும் இந்தப்படம் தான் கமலின் சுவாதி முத்யம்.... சிறந்த முத்து... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications