ஒரே நாளில் 31445 பேருக்கு கொரோனா.. கேரள மாடலுக்கு என்னாச்சு? சறுக்கியது எங்கே? சிக்கலில் வீணா ஜார்ஜ்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் கேஸ்கள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதோடு அங்கு மூன்றாம் அலை தொடங்கிவிட்டது என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக சராசரி கொரோனா பாதிப்பு 40- 50 ஆயிரத்திற்கும் இடையில்தான் பதிவாகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறையின் ஆலோசனைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 6 லட்சம் வரை செல்லலாம் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பீதியை கிளப்பி உள்ளது.
மூன்றாம் அலைக்கு இப்போதே பல்வேறு மாநிலங்கள் தயாராகி வரும் நிலையில், கேரளாவில் ஏற்கனவே மூன்றாம் அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அங்கு தினசரி கேஸ்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கேஸ்கள்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,445 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. அதோடு ஒரே நாளில் 215 பேர் கேரளாவில் பலியாகி உள்ளனர். பொதுவாக கேரளாவில் கேஸ்கள் அதிகம் பதிவானாலும் அங்கு பலி எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வந்தது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கையும் கேரளாவில் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,273 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

சோதனை
பொதுவாக கேரளாவில் அதிக சோதனை நடப்பதால் அதிக கேஸ்கள் வருவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் அதிக சோதனை செய்தாலும்.. இவ்வளவு வேகமாக கேஸ்கள் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் நேற்றை விட 31 சதவிகிதம் அதிகமான கேஸ்கள் இன்று கேரளாவில் பதிவாகி உள்ளது. இது மாபெரும் அதிகரிப்பு. கேரளாவில் நேற்று முதல் நாள் 13 ஆயிரம்+ கேஸ்களும், நேற்று 24 ஆயிரம்+ கேஸ்களும் பதிவானது. ஆனால் இன்று திடீரென 31 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மரணம்
கேரளாவில் தற்போது பாசிட்டிவ் டிபிஆர் சதவிகிதம் 19.3% ஆக உள்ளது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் கிட்டத்தட்ட 20 பேருக்கு அங்கு கொரோனா ஏற்படுகிறது. அந்த அளவிற்கு கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது. கேரளாவில் இதுவரை கொரோனா காரணமாக 19,972 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 36,72,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,59,355 என்ற அளவில் உள்ளது.

என்ன காரணம்
கொரோனா தடுப்பு பணியில் தொடக்க காலத்தில் கேரளா பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அங்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கேரளா மாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆனால் அங்கு இரண்டாவது முறை சிபிஎம் கூட்டணி ஆட்சிக்கு வந்த போது சைலஜாவிற்கு பதிலாக வீணா ஜார்ஜுக்கு பதவி வழங்கப்பட்டது. இவர் இளம் பெண் என்பதால் சுகாதாரத்துறையை இவர் எப்படி கவனிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சரிவு
ஆனால் தற்போது கேரளா தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் பின்னடைவை சந்திப்பது வீணாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இவருக்கு இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறையின் வல்லுனர் குழுவும் கூட கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகள், லாக்டவுன் ஆகியவை அறிவியல் முறைப்படி வகுக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில்தான் அங்கு கொரோனா கேஸ்கள் தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது.

ஓணம்
கேரளாவில் சமீபத்தில் பக்ரீத் பண்டிகைக்காக லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஓணம் பண்டிகைக்காக மீண்டும் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இப்படி ஒவ்வொருமுறை தளர்வுகள் கொண்டு வரப்படும் போது கேரளாவில் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த முறை ஓணத்திற்கு பின் கேரளாவில் கேஸ்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அளவிற்கு இது உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

கேரளா விளக்கம்
கேரளாவில் செரோ சர்வே மதிப்பு குறைவாக இருப்பதும் அங்கு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது கேரளாவில்தான் இந்தியாவிலேயே குறைவான மக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி ஆண்டிபாடி பெற்றுள்ளனர். கேரளாவில் செரோ சர்வே எனப்படும் கொரோனா ஆண்டிபாடி உள்ள மக்களை கணக்கெடுக்கும் சர்வேயில் 44 சதவிகிதம் மக்களே இதுவரை பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய அளவோடு (67%) ஒப்பிடும் போது கேரளாவில் குறைந்த மக்களே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே இதுதான் குறைவான மதிப்பு.

ஆனால் சந்தேகம்
அங்கு இன்னும் பலர் பாதிக்கப்படாமல் இருப்பதால், தொடர்ந்து புதிய கேஸ்கள் அதிகரித்து வருகின்றன என்று அம்மாநில அரசு தரப்பு விளக்கம் அளித்து உள்ளது. ஆனால் என்னதான் செரோ மதிப்பு குறைவாக இருந்தாலும் அதற்காக கேஸ்கள் இவ்வளவு வேகமாக உயருமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதை அம்மாநில அரசு எப்படி சமாளிக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு கேரளாவிற்கு அருகில் இருப்பதால் இந்த பாதிப்பு இங்கும் நீளும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலைக்கான எபிசென்டராக கேரளா உருவெடுக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications