இதுதான் இந்தியா..500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்த முஸ்லீம் பெண்! கோவிலுக்கு சமர்ப்பணம்
திருவனந்தபுரம்: கண்கள் அகல விரியும் சிரித்த முகத்தில் கண்ணன்.. வெண்ணை பானையிலிருந்து வெண்ணையை எடுத்து உண்ணப் போகும் கோலம்.. அழகான தத்ரூபமான இந்த ஓவியத்தை வரைந்தவர் பெயர் ஜஸ்னா சலிம். ஆம்.. இஸ்லாமிய பெண்தான் அவர்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் படங்களை தனது கை வண்ணத்தில் ஓவியமாக தீட்டியுள்ளார். இருந்தாலும், 6 வருடங்களாக காத்திருந்த ஜன்சா சலிம் கனவு இப்போது நனவாகியுள்ளது.
தான் ஆர்வமாக வரைந்த கிருஷ்ணரின் ஓவியத்தை, பந்தளம் கிருஷ்ணர் சுவாமி கோவிலில் உள்ள சிலைக்கு முன்பாக சென்று சமர்ப்பிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அவர்.

ஓவியம் பற்றி கனவு
இதுபற்றி அவரே நெகிழ்ச்சியோடு கூறியதை பாருங்கள்: எனக்கு ஒரு பெரிய கணவு இருந்தது. கண்ணன் சிலை அருகே நிற்க வேண்டும், எனது பெயிண்ட்டிங்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அது. இப்போது அந்த கனவு, பந்தளத்திலுள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில், நிறைவேறியுள்ளது. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. கோவில் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். சின்ன கண்ணன், வெண்ணை பானையோடு அமர்ந்திருக்கும் ஓவியத்தை வரைந்து கோவிலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று, ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் பக்தர்கள் எண்ணிடம் கேட்டுக் கொண்டனர். அது இப்போது நிறைவேறியுள்ளது.

உலக படத்திற்கு பதில் கண்ணன் படம்
பள்ளி நாட்களில் இருந்தே, கிருஷ்ணர் ஓவியங்களை வரைவது எனக்கு இயல்பான பழக்கமாக மாறியது. உலக மேப் வரையுமாறு ஆசிரியர் கேட்டபோது, நான் கண்ணன் படத்தை வரைந்தேன். யதேர்ச்சையாக என்னை அறியாமல் அப்படி வரைந்து விட்டேன்.

சிறு வயது பழக்கம்
பழைய பேப்பர்களை எனது குடும்ப உறுப்பினர்கள் வாங்கி வந்தபோது அதிலிருந்த கிருஷ்ணர் படத்தை பார்க்க நேரிட்டது. அன்று முதலே, கிருஷ்ணரின் உருவம் எனது மனதிற்குள் பதிவானது. அதுதான் எனது ஓவியமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

கண்ணா என்பார்கள்
எனக்கு 3 அக்காள்கள். நான் நான்காவது குழந்தை. எனது வீட்டில் எல்லோரும் என்னை கண்ணா, கண்ணா என்று அழைப்பார்கள். அந்த பெயரும் கிருஷ்ணருடைய கண்ணன் என்ற பெயரும் எனக்கு ஒரு இணைப்பை கொடுத்தது. முதலில் ஒரு இந்து தோழி குடும்பத்திற்கு கிருஷ்ணரின் ஓவியத்தை வரைந்து கொடுத்தேன். அந்த ஓவியத்தை அவர்கள் வீட்டில் வைத்தது முதல், வீட்டில் நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இதை அவர்களே எனக்குச் சொல்லி இன்னும் நிறைய ஓவியம் கேட்டனர். நானும் இதுவரை 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் படங்களை வரைந்துள்ளேன். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, விசு போன்ற பண்டிகை நாட்களில், கடந்த 6 வருடங்களாக குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு எனது ஓவியங்களை வழங்கி வருகிறேன். ஆனால் இப்போதுதான், எனது ஆசைப்படி கிருஷ்ணரின் சிலை அருகே சென்று ஓவியத்தை வழங்கும் வாய்ப்பை பெற்றேன்.

இதுதான் நமது பண்பாடு
என்றாவது ஒருநாள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் வரைந்த ஓவியத்தை பரிசளிக்க விரும்புகிறேன். அது நடக்கும் என்று காத்திருக்கிறேன். இவ்வாறு நெகிழ்ச்சியோடு கூறுகிறார் ஜன்சா சலிம். இதுதான் இந்தியா. இதுதான் நமது பண்பாடு என்பதை உணர்த்துவதை போல உள்ளது இந்த நிகழ்வு.












Click it and Unblock the Notifications