துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்.. நடிகர் பிரித்விராஜ் வீட்டில் ரெய்டு.. சுங்கத்துறை அதிரடி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது நடிகர் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று பல தமிழ் திரைப்படங்களில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

அதேபோல் கேரளாவை சேர்ந்த நடிகர் பிரித்விராஜ். இயக்குநர், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மொழி, சத்தம் போடாதே, அபியும் - நானும், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துல்கர் சல்மான் - பிரித்விராஜ் ஆகியோருக்கு கேரளா மாநிலம் கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. இந்நிலையில் தான் கொச்சியில் உள்ள இருவரின் வீடுகள் உள்பட மொத்தம் 30 இடங்களில் இன்று திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் (Customs Officials)அதிரடியாக சோதனையை மேற்கொண்டுள்ளனர். கொச்சியின் திவாரா பகுதியில் உள்ள பிரித்விராஜின் சொகுசு வீடு மற்றும் கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள துல்கர் சல்மானின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பூடான் நாட்டின் வழியாக நம் நாட்டுக்கு உயர்ரக கார்களை இந்தியா கொண்டு வந்து மத்திய அரசுக்கு வரி செலுத்தாமல் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருந்து பூடானுக்கு கார்களை இறக்குமதி செய்யும் நபர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அந்த கார்களை ஒரு கும்பல் வாங்கி இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வருகிறது.
இந்த கார்களை குறைந்த விலைக்கு வாங்கிய கும்பல் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக நடிகர்கள், பெரும் பணக்காரர்களை குறிவைத்து இந்த விற்பனை நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் ஆவணங்களை சரி பார்க்காமல் இந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இது சட்டவிரோதமானதாகும். சொகுசு கார்களின் மதிப்பை மறைத்தும், மத்திய அரசுக்கு வரி கட்டுவதை தவிர்த்து இந்த கார்களை அவர்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தான் இன்று நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்வி ராஜ் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையின்போது துல்கர் சல்மானின் லேண்ட் ரோவர் டிபென்ஸ் உள்பட 2 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கார்களை பூடான் வழியாக இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கருதி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகள் துல்கர் சல்மானிடம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கொச்சியில் உள்ள பிரித்விராஜ் வீட்டிலும் சோதனைகள் நடந்து வருகிறது. அதேவேளையில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரித்விராஜின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு கார் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில் இந்த ரெய்டு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications