நோ கிப்ட்... நோ மொய்....எளிய முறையில் நடைபெற்ற நாட்டின் இளம் மேயரின் திருமணம்!
திருவனந்தபுரம்: நாட்டின் இளம் வயது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் எளியமுறையில் நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை ஆளும் மா.கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த திருமணமும் எளிய முறையில் நடத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி மையத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மாநிலத்தின் முதலமைச்சர் பினாராயி விஜயன் பங்கேற்றார்.

எளிய முறையில் திருமணம்
கடந்த 2021ல் நடைபெற்ற அம்மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்று திருவனந்தபுரம் மேயராக ஆர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் கல்லூரி மாணவர். இதன் மூலம் நாட்டின் இளம் மேயர் எனும் அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில் இவருக்கும் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ சச்சின் தேவ்-க்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயம் நடைபெற்றது. இதனையடுத்து அவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் முன்னிலையில் இன்று திருமணம் நடந்துள்ளது.

திருமண அழைப்பிதழ்
இந்த திருமணத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகின. அதாவது, திருமணத்தின் அழைப்பிதழ் கட்சியின் 'லெட்டர் பேட்' போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக திருமணமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நோ கிப்ட்
ஏனெனில், இந்த திருமணத்திற்கு வருபவர்கள் பரிசு பொருட்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். அதேபோல, மொய் அளிக்க விரும்புவோர் அந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், முதியோர் இல்லங்களுக்கும் வழங்குமாறும் மணமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நம்மூரில் கவுன்சிலரின் மகன்/மகள் திருமணம் ஊரே திரும்பி பார்க்கும் வண்ணம் தடல்புடலாக நடத்தும் இந்த காலத்தில் நாட்டின் இளைய மேயரும், நாட்டின் இளைய எம்எல்ஏவும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் திருமணம் செய்துகொண்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மணமக்கள் விவரம்
மாப்பிள்ளையை பொறுத்த அளவில், சச்சின் தேவ் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) அகில இந்திய இணைச் செயலாளராகவும், கட்சியின் கோழிக்கோடு மாவட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார். மணமகள் ஆர்யா திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் மாணவியாக இருந்தபோது 21 வயதில் மேயரானார். அவர் SFI இன் மாநிலக் குழு உறுப்பினராகவும், CPM இன் பகுதிக் குழு உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications