18 படிகளிலும் தலையை ஒற்றி எடுத்து.. கண் குளிர ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள்
சபரிமலை: சபரி மலை ஐய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. நாள்தோறும் 2,000 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். உலகம் முழுக்க கொரோனா பரவல் இருப்பதால் இதுபோன்ற கட்டுப்பாடு உள்ளது. இது பக்தர்கள் வருகையை குறைத்துள்ளபோதிலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் சிறப்பான தரிசன பாக்கியம் பெறுகிறார்கள் என்பது ஒரு நல்ல விஷயமாகும்.
வழக்கமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல-மகர பூஜை காலகட்டத்தில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வது கூட வழக்கம்.

இப்படியான நிலையில், கூட்டத்தால் அதிக நேரம், சன்னதியில் நின்று இறைவனை தரிசனம் செய்வது சிரமம். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.
சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள், கண் குளிர ஐயப்பனை தரிசனம் செய்து, கண்களில் நீர் கசிய உணர்ச்சி பெருக்குடன் செல்கிறார்கள். 18 படிகளிலும் நின்று நிதானமாக, கும்பிட்டு செல்கிறார்கள் பக்தர்கள். சிலர் ஒவ்வொரு படிக்கட்டிலும், குனிந்து தங்கள் தலையை படிக்கட்டில் வைத்து சரணாகதியடைந்து வழிபடுகிறார்கள். இதுபோல முன்பு பொறுமையாக ஒவ்வொரு படியாக வழிபடுவது சிரமமான விஷயமாகும். இப்போது பக்தர்கள், ஐயப்பனோடு மேலும் நெருக்கமாக உணர்கிறார்கள்.
பி.பி.இ. கிட் அணிந்த போலீஸ்காரர்கள், கீழே மற்றும் மேல் பகுதிகளில் பாதுகாப்புக்கு உள்ளனர். பக்தர்கள் சன்னதியின் முன்புறத்தை அடைந்ததும், பாலம் மீது செல்லாமல் கொடிக் கம்பத்தின் வலது பக்கத்தில் உள்ள சன்னதியை நேரடியாக அடையலாம்.

அய்யப்பன்மார்கள் பெரும்பாலும் பரிவார தேவதைகளுக்கு முன்பும் நீண்ட நேரம் நின்று வணங்க முடிகிறது. மாளிகைபுரத்தில் தரிசனம் செய்தபின், பிரசாதம் விநியோக கவுண்டரில் இருந்து அப்பம் மற்றும் அரவணையை வாங்கலாம். ஆனால் நேரடி அபிஷேகத்திற்கு வாய்ப்பு இல்லை. பாரம்பரிய வழியான நீலிமலையை மிதிக்க முடியாது.
பம்பாவில் தற்காலிக குளியல் பகுதிகள் உள்ளன. சன்னதிக்குப் பின்னால் உள்ள கவுண்டரில் நெய் அபிஷேகம் செய்வதற்கு நெய்யைக் கொடுத்த பிறகு, காவல் நிலையத்திற்குக் கீழே உள்ள கவுண்டரில் வாங்கிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications