அம்மா அம்மா நீ எங்கே அம்மா! தாயை பிரிந்த குட்டி யானை! வயநாட்டில் "பேருந்தில் தேடும்" சோகம்
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று சாலையில் செல்லும் வாகனங்களை எல்லாம் வழிமறித்து துரத்திச் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது. ஒரு பேருந்தை துரத்திக் கொண்டு நீண்ட தூரம் ஓடி வந்த குட்டியை பார்த்து பலர் பரிதவித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் அடர்ந்த வனப் பகுதிகளை கொண்டது. இங்கு முக்கியமான சுற்றுலா தலம் என்றால் அது தோள்பட்டி. இங்குள்ள நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

இந்த நிலையில் சாலையில் குட்டி யானை அவ்வழியாக வந்த வாகனங்களை எல்லாம் துரத்திக் கொண்டு பின்னால் ஓடியது. அந்த வழியாக வந்த ஒரு பேருந்தை வழிமறித்தது. பின்னர் அந்த பேருந்தையே சுற்றி வந்தது.
அந்த குட்டி யானை, சற்று தள்ளி சென்றதும் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இதையடுத்து அந்த குட்டி யானை பேருந்தின் பின்னால் ஓடியது. பேருந்து வேகமாக சென்றதை அடுத்து அவ்வழியாக சென்ற காரையும் அந்த யானை துரத்தியது. இந்த குட்டி யானையின் பரிதவிப்பு குறித்து கேரள வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த குட்டி தவிப்பதை பார்த்த மக்களுக்கு மனம் வேதனை அடைந்தது. ஒரு வேளை நம் தாய் பேருந்திலோ அல்லது காரிலோ இருப்பாள் என அந்த குட்டி நினைத்ததோ என்னமோ தெரியவில்லை. இல்லாவிட்டால் தன்னையும் தனது தாய் இருக்கும் இடத்தில் இறக்கி விடுங்கள் என கூறியதா என்றும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அந்த குட்டி விரைவில் தாயின் அரவணைப்பிற்கு செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications