ஸ்தம்பித்த பாலக்காடு.. கோவையைகூட விடலையே.. நெரிசலில் சிக்கிய "தோவாளை".. சாரை சாரையாக குவிந்த கேரளா
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை "களை" கட்டத்துவங்கியதால், பாலக்காட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, தமிழக எல்லைகளிலும் கேரள மக்கள் குவிந்து வருகிறார்கள்.
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை... ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது... உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும், கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

ஓணம் பண்டிகை: நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரி மலை கோயிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சபரி மலையில் இன்று முதல் திருவோண நட்சத்திரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
வரும் 30ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரள மாநிலமே களை கட்டி உள்ளது.. அதிலும், பாலக்காடு ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இந்த பண்டிகைக்கு புத்தாடை எடுக்க பொதுமக்கள் திரண்டு கடைகளுக்கு செல்கிறார்கள்..
ஓணம் சத்யா: மேலும், பூக்கோலம் போடுவதற்கு பூக்களை வாங்குவதற்கும், ஓணம் சத்யா என்று அழைக்கப்படும் விருந்து படைக்க காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்குவதற்கும், குடும்பம் குடும்பமாக மக்கள் பாலக்காடு நகரில் ஒன்று திரண்டுவிட்டனர்.
இதனால், காலையிலேயே பாலக்காடின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.. குறிப்பாக, பெரிய கடை வீதி, டவுன் பஸ் ஸ்டாண்ட் சாலை, கோர்ட் ரோடு, கல்லுாரி சாலை, ஜிபி ரோடு, ஸ்டேடியம், பஸ் ஸ்டாண்ட் பகுதி போன்ற இடங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.. இதனால், போலீசார் இந்த டிராபிக்கை சீர்படுத்துவதற்குள் திணறிவிட்டனர்..
விடுமுறை இல்லை: வழக்கமாக ஞாயிறு லீவு விடப்படும் நிலையில், தற்போது பண்டிகை என்பதால், எந்த கடையும் மூடப்படவில்லை. வரும் 30ம் தேதி வரை, கேரள சாலையில் போக்குவரத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
அதுமட்டுமல்ல, கேரள எல்லையையொட்டியுள்ள தமிழகத்தின் பகுதிகளிலும் கேரள மக்கள் குவிந்துவருகிறார்கள்.. நாளை திருவோணம் அத்தப்பூ கோலமிட்டு உலகை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதால், அத்திப்பூ கோலமிட தேவையான பூக்களை, தோவாளை பூச்சந்தையில் கிடைக்கும் என்பதால் கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

ஆர்எஸ் புரம்: அதேபோல, கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, ஆர்.ஜி வீதியில் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது... இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரிகள் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்... ஓணம் பண்டிகை தினம் நெருங்குவதைத் தொடர்ந்து கோவை பூமார்க்கெட்டிலும், பூக்களின் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
நெரிசல்: செண்டு மல்லி, வாடா மல்லி, மல்லி, வெள்ளை செவ்வந்தி, வண்ண செவ்வந்தி, அரளி ஆகிய பூக்கள் அதிகளவில் வாங்குவார்களாம்.. இதில் செண்டு மல்லி, வாடா மல்லி உள்ளிட்ட மல்லி வகைகள் ஓசூர், தேன் கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், சத்திய மங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதால்,இதனை வாங்க கேரள மக்கள் தமிழக எல்லைகளில் குவிந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications