தமிழகத்தை போல்.. கேரளாவிலும் காங்கிரஸ்க்கு ‛ஆப்பு' வைக்கும் சொந்த தலைவர்! பினராயி விஜயனுக்கு ஆதரவு
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் திமுகவை கடுமையாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கேரளா சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. உள்ளாட்சி தேர்தலி்ல காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை புகழ்ந்து அவர் தான் அடுத்தும் முதல்வராவார் என்று கூறி சொந்த கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு வேண்டும். 35க்கும் அதிகமான இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கூறி வருகின்றனர்.

இதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலினே பேசிவிட்டார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து திமுகவை சீண்டி வருகின்றனர்.
தமிழகத்தில் நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அவருடன் கூட்டணி செல்லும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியினர் இப்படி பேசி வருகின்றனர். விஜயை எடுத்து கொண்டால் இன்னும் தேர்தலில் தனது கட்சி பலத்தை நிரூபிக்கவில்லை. இதனால் விஜயுடன் கூட்டணி வைத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு எப்படி பலன் அளிக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு பல எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்பட பலரும் திமுகவை சீண்டி வருகின்றனர். இதனால் திமுகவினரோ காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி சென்றால் எம்எல்ஏ இல்லாமல் போய்விடுவார்கள். அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை தரும் என்று வார்னிங் செய்து வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்காலம் என்ன என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் சொந்த கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ஒருவர் உலை வைத்துள்ளார். அவரது பெயர் தான் மணி சங்கர் ஐயர். தமிழகத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர். இவர் தற்போது கேரளாவின் அடுத்த முதல்வராக மீண்டும் பினராயி விஜயன் தான் வருவார் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இது கேரளாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டோஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய பதிவு செய்துள்ளார். அதில், ‛‛ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், சிபிஐ(எம்) தலைமையிலான அரசு நடத்தும் பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவிலேயே மிகவும் வலுவானதாகப் பாராட்டினார். இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில், 1931-இல் காந்திஜி விரும்பிய கிராம அளவிலான ஜனநாயகத்தை (grassroots democracy) காங்கிரஸ் அரசுகளை விட சிறப்பாக நிறைவேற்றியிருப்பதாகக் கூறினார்.
மணி சங்கர் ஐயர், 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கணித்துள்ளார். கேரளாவின் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதற்கு கர்நாடக மாதிரியையும், வி.கே. ராமச்சந்திரன் போன்ற நிபுணர்களின் அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு மாவட்ட திட்டமிடலை மேம்படுத்த வேண்டும் என்றார்.
கேரளா மாநில பட்ஜெட்டில் 35%க்கு மேற்பட்ட தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவை திறம்பட நடைபெறுகின்றன. 1993-ஆம் ஆண்டு மக்கள் திட்டமிடல் (People's Planning) மூலம் அமைக்கப்பட்ட இந்த முன்மாதிரி ஆட்சியை அளவிடும் அளவுகோலாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கேரளாவில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜகவை விட அதிக இடங்களில் காங்கிரஸ் வென்று அசத்தியது.தமிழகத்தை போல் விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்திகாங்கிரஸ் வெல்ல நினைக்கிறது. இப்படியான சூழலில் தான் மணி சங்கர் ஐயரோ, பினராயி விஜயன் சிறப்பாக செயல்படுகிறார். மீண்டும் அவர் தான் முதல்வராவார் என்று பேசியிருப்பது காங்கிரஸ்க்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications