"என்ன பிரச்சனை வந்தாலும் அப்பா பார்த்துப்பாரு!” 3 பேர் கார் மோதி கொன்ற கேரள இளைஞர் சொன்ன வார்த்தை
கொச்சி: கேரளாவில் மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 3 பேரை கொன்ற இளைஞர், போலீஸ் விசாரணையில் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேடியிருக்கிறார். மேலும், என்ன பிரச்சனை வந்தாலும் தனது தந்தை பார்த்து கொள்வார் எனவும் அசால்டாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகீர் கிளப்பி வருகிறது.
கேரள மாநிலம் நெடும்பாசேரி விமான நிலைய சாலையில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் நடந்த இந்த விபத்து தொடர்பாக, மது போதையில் கார் ஓட்டியதாகக் கூறப்படும் சுஹைல் (19) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

3 பேர் உயிரிழப்பு
மேலும், காரில் அவருடன் பயணம் செய்த நினவ் (19) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் வயநாட்டை சேர்ந்த தேவிகா (21), பாலக்காட்டை சேர்ந்த கோபிகா (22), கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த இயாஸ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் திருக்காக்கராவில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.
விமான நிலைய சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த மூவர் மீதும், பின்னால் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் மோதியது. ஸ்கூட்டர் மீது கார் அதிவேகமாக மோதியதில் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்படுவதும், ஸ்கூட்டர் கிட்டத்தட்ட 100 மீட்டர் வரை தள்ளி சென்று விழுவதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
என்ன நடந்தது
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தில் காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டு, அத்தானிக்கு மூவரும் ஸ்கூட்டரில் திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
கார் ஓட்டிய சுஹைல், ஆலப்புழா தெற்கு பகுதியை சேர்ந்த ஜமாலின் மகன் ஆவார். விபத்து நடந்த இடத்திலேயே அவரை பிடித்த போலீசார், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
போலீஸ் தகவல்
இது தொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். சுதர்ஷன் கூறுகையில், "ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், முதற்கட்ட விசாரணையில் சுஹைல் மது போதையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. அவர் வேறு போதை பொருட்களை பயன்படுத்தியிருந்தாரா என்பதையும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
விபத்துக்குப் பிறகு, சுஹைலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அவற்றில் ஒரு வீடியோவில், நெடுஞ்சாலையில் அவர் மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அப்பா பார்த்துப்பாரு
விபத்தின்போது கார் மணிக்கு 120 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாகச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காரில் விரிவான தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த பிறகு போலீஸ் விசாரணையில் சுஹைல் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தான் இருந்தாராம். 3 பேரை கொன்றுவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல்.. ரோடு வாகங்கள் செல்ல தானே இருக்கு என கேட்டு இருக்கிறார். மேலும், என்ன பிரச்சனை வந்தாலும் தனது தந்தை பார்த்து கொள்வார் எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவில் சட்டப்படி மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக உள்ள நிலையில், 19 வயதான சுஹைலுக்கு மது வழங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சுஹைல் பல்வேறு பார்களுக்கு சென்று அன்றைய தினம் மது குடித்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
