தினமும் 500 ஸ்பாட் புக்கிங் பாஸ்.. சபரிமலை பெருவழிப்பாதை யாத்ரீகர்களுக்கு குட்நியூஸ்! என்ன ஸ்பெசல்?
சென்னை: பரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை - மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், பெருவழிப்பாதையில் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக 500 சிறப்பு பாஸ்கள் வழங்கப்படுமென திருவிதாங்கூர் தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

சபரிமலை ஸ்பாட் புக்கிங்
இதனால் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கூட்ட நெரிசல் குறைந்து இருக்கும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருவழிப்பாதை பக்தர்கள்
இந்நிலையில், பெருவழிப்பாதை வழியாக யாத்திரை மேற்கொண்டு வருகிற பக்தர்களுக்காக நல்ல செய்தி வெளியாகியுள்ளது. எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தினமும் 500 'ஸ்பாட் புக்கிங் கூப்பன்' வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் அறிவித்துள்ளார். பக்தர்கள் அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழியாக பயணிக்கக் கூடாது என்றும், அவ்வழிகளில் யாரும் செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், முக்குழி பகுதியில் தினமும் 500 பேருக்கு வழங்கப்படும் இந்த ஸ்பாட் புக்கிங் கூப்பனைப் பெறுபவர்கள், பம்பை வழியாக சன்னிதானத்தை அடைய வேண்டும் என்றார்.
அன்னதான திட்டம்
இதோடு, பக்தர்களுக்காக இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சன்னிதானத்தில் நடைபெறும் அன்னதானத்தில் வரும் டிசம்பர் 2 முதல் மதியம் பாயசத்துடன் கூடிய சிறப்பு விருந்து வழங்கும் திட்டம் தொடங்குகிறது. சோறு, சாம்பார், பருப்பு, அவியல், துவரன், ஊறுகாய், பப்படம், பாயசம் என குறைந்தது ஏழு வகை உணவுகள் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான பாயசம் வழங்கப்படுவது சிறப்பு. இது பக்தர்களுக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படும்.
விமான சலுகை
இதற்கிடையில், விமானத்தில் பயணம் செய்யும் ஐயப்பன் பக்தர்களுக்கு மிக முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கேபின் பேக்கேஜ் மூலம் மட்டும் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி இருந்த நிலையில், இனி பயணிகள் தங்கள் இருக்கையில் நேரடியாக இருமுடியை எடுத்துச் செல்லலாம் என விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார். இந்த சலுகை அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பக்தர்களின் உணர்வுகளை மதிப்பதோடு பாதுகாப்பு நடைமுறைகளையும் கவனத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications