ராகுல் காந்தி மார்பில் துப்பாக்கி குண்டு பாயும்.. மிரட்டிய பாஜக நிர்வாகி.. காங்கிரஸ் கொந்தளிப்பு
திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு, கேரளா பாஜக நிர்வாகி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தார். "ராகுலின் மார்பில் துப்பாக்கி குண்டு பாயும்." என அவர் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளா பாஜக நிர்வாகியாக இருப்பவர் ப்ரிந்து மகாதேவன். கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் நேபாளம், வங்கதேசம் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய பாஜக நிர்வாகியுமான ப்ரிந்து மகாதேவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதுதான் இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

ராகுலுக்கு கொலை மிரட்டல்
"அந்த நாடுகளை போல இந்தியாவில் போராட்டம் நடக்க வாய்ப்பே இல்லை. நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் உறுதியாக நிற்கிறார்கள். காங்கிரஸ் ராகுல் காந்தி அதுபோன்ற செயல்களை தூண்டினால் அவரின் மார்பில் துப்பாக்கி குண்டு பாயும்." என்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் ராகுல் காந்திக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கண்டனம்
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஶ்ரீ குமார் பேராமங்கலம் காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி மகாதேவன் மீது புகார் அளித்தார். மேலும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வேணுகோபால், பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
வழக்கு
அதில், "பாஜக நிர்வாகி ப்ரிந்து மகாதேவன் மீது நடவடிக்கை எடுக்காவிடின், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்." என்று கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் அளித்தப் புகாரின் அடிப்படையில் பேராமங்கலம் காவல்துறையினர் பாஜக நிர்வாகி மகாதேவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் தற்போதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் மௌனம் காத்து வருகிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications