"ஸ்கூலில் இதெல்லாம் எதுக்கு!" கேரள பள்ளிகளில் ஜூம்பா டான்ஸ்.. முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு பிரசாத்திற்காகப் பள்ளிகளில் ஜும்பா நடனத்தை அறிமுகப்படுத்தக் கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், ஜூம்பா நடனத்தை அறிமுகப்படுத்த கேரளாவில் உள்ள சில மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது அங்குப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாகக் கேரளக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில பள்ளிகளில் ஜும்பா நடனத்தை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இதற்குச் சில மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகினறன. இது அங்குப் பெரிய சர்ச்சையாக வெடித்து வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

ஜூம்பா டான்ஸ்
ஜூம்பா நடனத்திற்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் இதுபோன்ற விஷயங்கள் சர்ச்சைக்கு வழிவகுக்கக்கூடாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. ஒரு தரப்பினர் இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இருப்பினும், கேரள அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்குவது போலத் தெரியவில்லை. இது குறித்து அம்மாநிலக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், "ஒரு தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சினை செய்கின்றனர். குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் அரசு செய்யவில்லை. இது தொடர்பாகத் தவறான புரிதல் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், தற்போதைய நிலைப்பாட்டில் இருந்து அரசு பின்வாங்காது" என்றார்.
முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு
கேரளாவில் பள்ளிகளில் ஜூம்பா நடனம் அறிமுகம் செய்யப்பட்டது தொடர்பாகச் சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளிகளில் இதுபோன்ற நடனம் இருக்கக்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சிவன்குட்டி, "ஜூம்பா, ஏரோபிக்ஸ் மற்றும் யோகா போன்றவற்றுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய எதிர்ப்பு சமூகத்தில் போதைப்பொருளைக் காட்டிலும் கொடிய விஷத்தைச் செலுத்தும். கல்வித்துறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, இது வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை அதிகரிக்கும்" என்றார். அதேநேரம் எதிர்ப்புகள் எழுந்ததால் பள்ளிகளில் குழந்தைகள் வழக்கமான சீருடையில் செய்யும் எளிய உடற்பயிற்சிகள் மட்டுமே இது இருக்கும் என அமைச்சர் சிவன்குட்டி விளக்கமளித்துள்ளார்.
சிவன்குட்டி விளக்கம்
கல்வி உரிமை விதிமுறைகளை மேற்கோள் காட்டிய அமைச்சர் சிவன்குட்டி, அரசு பரிந்துரைக்கும் கற்றல் செயல்முறைகளில் குழந்தைகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரங்களில் பெற்றோரால் தேர்வு செய்ய முடியாது. விதிமுறைகளின்படி பரிந்துரைக்கப்பட்ட விஷயங்களை ஆசிரியர் செய்ய வேண்டும். குழந்தைகளை யாரும் இறுக்கமான ஆடைகளை அணியச் சொல்லவில்லை" என்றார்.
பள்ளிகளில் ஜூம்பா நடனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் அமைப்புகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட சிவன்குட்டி, இங்குள்ள சில இயக்கங்கள் வகுப்புவாத அமைப்புகளுக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகின்றன. அவர் மேலும் கூறுகையில், "கேரளாவைப் போன்ற ஒரு சமூகத்தில் நாம் இணக்கமாக வாழ்கிறோம்.. இதுபோன்ற நிலைப்பாடுகள் வகுப்புவாதத்தை மட்டுமே ஊக்குவிக்கும்..
அவசியம்
கல்வியில் விளையாட்டுகள் ரொம்பவே முக்கியம்.. விளையாட்டுகளில் ஈடுபடுவது குழந்தைகள் மன மற்றும் உடல் தகுதி, ஆரோக்கியம் மற்றும் பாசிட்டிவ் சிந்தனையை வளர்க்க உதவும். இது அவர்களின் கற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் சாதகமான இருக்கும். எனவே, குழந்தைகளிடையே இதுபோன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது அவசியம்" என்றார்.












Click it and Unblock the Notifications