என்ன நோய் என தெரியாமல் குழம்பிய கேரள மருத்துவர்! வெறும் 10 நொடியில் கண்டுபிடித்த மூதாட்டி! அடடே செம
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருவருக்கு ஏற்பட்ட நோயைப் பிரபல மருத்துவரால் கண்டுபிடிக்கவே முடியாத நிலையில், அவரது வீட்டில் வேலை செய்யும் மூதாட்டி அதை வெறும் 10 நொடிகளில் கண்டறிந்துள்ளார்.
நாம் என்ன தான் பெரிய படிப்பு எல்லாம் படித்து இருந்தாலும் அனுபவம் கொடுக்கும் பாடமே நமக்குத் தனி தான்.. பல நேரங்களில் அனுபவசாலிகள் கொடுக்கும் சின்ன அட்வைஸ் நமது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும்.

கேரள மருத்துவர்: அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 'தி லிவர் டாக்டர்' என்று அழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் சைரியாக் அப்பி பிலிப்ஸ் சமீபத்தில் தனக்கு நேர்ந்த ஒரு சுவாரசிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதாவது சமீபத்தில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
இருப்பினும், என்ன பாதிப்பு என்பதை மருத்துவர் பிலிப்ஸால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனால் அவர் சிரமத்தை எதிர்கொண்டார். மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட போதிலும் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிவதில் சிக்கல் தொடர்ந்தது. இதனால் டென்ஷனான அவர் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்துள்ளார்.
என்ன நடந்தது: அதன் பிறகு நடந்ததை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "எனது குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென சளி, சோர்வு மற்றும் மூட்டுவலி ஏற்பட்டது. கூடவே வினோதமான சொறியும் உடலில் ஏற்பட்டு இருந்தது. காய்ச்சலும் விட்டு விட்டு இருந்தது. அவருக்கு என்ன பாதிப்பு என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. வைரஸ் ஹெபடைடிஸ் முதல் கொரோனா வரை இன்ஃப்ளூயன்ஸா முதல் டெங்கு வரை அனைத்து சோதனைகளையும் செய்தோம். இருப்பினும், என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி என்ன பிரச்சினை என்றே தெரியாமல் இருந்த போது அவரது வீட்டில் வேலை செய்த வயதான பெண் ஒருவர் அசால்டாக என்ன நோய்ப் பாதிப்பு என்பதைக் கண்டுபிடிக்க உதவி இருக்கிறார். இதையும் அவரே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
பணிப்பெண்: அதாவது, "என்ன நோயாக இருக்கும் எனத் தெரியாமல் குழம்பினேன்.. அப்போது வீட்டில் வேலை செய்யும் அந்த மூதாட்டி வந்தார். தனது பேரக்குழந்தைகளுக்கும் இதே போலச் சொறி இருப்பதாகக் கூறினார். இதை எங்கள் ஊரில் அஞ்சம்பாணி என்று அழைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னது போல நான் அதற்கான சோதனை செய்தோம். அதில் அஞ்சம்பாணி பாதிப்பு தான் என்பது உறுதியானது.
17 ஆண்டு மருத்துவத் துறையில் அனுபவம் கொண்ட என்னால் கண்டுபிடிக்க முடியாததை.. எனது வீட்டில் வேலை செய்யும் மூதாட்டி வெறும் 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதென்ன அஞ்சம்பாணி: கேரளாவில் அஞ்சம்பாணி என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பை ஆங்கிலத்தில் தி ஃபிப்த் நோய் (fifth disease) எனக் குறிப்பிடுகிறார்கள். இது எரித்மா இன்ஃபெக்டியோசம் என்றும் அழைக்கப்படுகிறது, இது மனித பார்வோவைரஸ் பி 19ஆல் ஏற்படும் வைரஸ் தொற்று ஆகும். இந்த பாதிப்பு குழந்தைகளிடையே தான் முக்கியமா ஏற்படும்.. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது அல்லது தும்மும்போது இது மற்றவர்களுக்கும் பரவும்.
கன்னங்களில் திடீரென தோன்றும் சிவப்பு நிற சொறி தான் இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த சொறி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். அதேநேரம் இந்த நோயால் மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தாண்டு தொடக்கத்தில் கொச்சியில் இருந்து மும்பைக்கு சென்ற ஆகாசா ஏர் விமானத்தில் திடீரென ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது துரிதமாகச் செயல்பட்டு அவரது உயிரை இந்த டாக்டர் பிலிப்ஸ் தான் காப்பாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் தனது சமூக வலைத்தளங்களில் மருத்துவம் குறித்தும் உடல்நிலை குறித்தும் உள்ள போலி தகவல்கள் குறித்து இவர் தொடர்ந்து விளக்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications