Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் ஒரு அரசியல் கட்சியின் முத்திரை இடம் பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தன. இந்த நிலையில், மேற்கூறிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், தவறுதலாக இந்த சம்பவம் நடைபெற்று விட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுவை ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கேரளா, அசாம், புதுவை ஆகிய மூன்று மாநிலங்களில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது.

பாஜகவின் அலுவலக முத்திரை
வரும் ஏப்ரல் 09 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலின் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் நேற்றுடன் முடிவு பெற்றது. அந்த வகையில், கேரளாவில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அவர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் FAQ அனுப்பியிருந்தது.
வேட்பாளர்களின் குற்ற பின்னணி தொடர்பான விளக்கங்களுடன் இந்த Faq வடிவிலான கேள்வி பதில்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மின்னஞ்சல் வாயிலாக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. தேர்தல் ஆணையம் அனுப்பிய இந்த கடிதத்தில் பாஜகவின் அலுவலக முத்திரை இடம் பெற்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் ஆணையம் பதில்
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை தனது அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றசாட்டுகள் எழுப்பி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் ஒரு அரசியல் கட்சியின் முத்திரை இடம் பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி, பாஜகவின் அலுவலக முத்திரையும் தேர்தல் ஆணைய கடிதம் வந்து இருப்பதாக முதன் முதலில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. ஏற்கனவே நடுநிலைதன்மையோடு தேர்தல் ஆணையம் நடந்து கொள்வது இல்லை. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் பலரின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளன என்று அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் ஆணையத்தை சாடும் நிலையில், தேர்தல் ஆணையம் வாண்டடாக வந்து சர்ச்சையில் சிக்கியது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அலுவலகப் பிழை மட்டுமே
கேரள அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தன. இந்த நிலையில், மேற்கூறிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், தவறுதாலக சம்பவம் நடைபெற்று விட்டதாக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியானதாகவும், அதில் பாரதிய ஜனதா கட்சி முத்திரை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படும் ஒரு கடிதம் பல மலையாள செய்தி சேனல்களில் பரவி வருகிறது. நடந்த அந்த சம்பவம் , இது முற்றிலும் ஒரு அலுவலகப் பிழை (clerical error) மட்டுமே என்றும், அது உடனடியாக கண்டறியப்பட்டு திருத்தப்பட்டது.
சமீபத்தில், 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் குற்றப்பின்னணி வெளியீடு தொடர்பான வழிகாட்டுதல்களைப் பற்றி விளக்கம் கேட்டு கேரள தலைமை தேர்தல் அதிகாரிஅலுவலகத்தை மாநில பாஜக அணுகியது. அந்த கோரிக்கையுடன், 2019ஆம் ஆண்டின் உத்தரவு நகலையும் பாஜக வழங்கியிருந்தது. அதில் அக்கட்சியின் முத்திரை இடம் பெற்று இருந்தது.
தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்
இதை கவனிக்காமல் அந்த நகல் பிற அரசியல் கட்சிகளுக்கும் விளக்கமாக தவறுதலாக அனுப்பப்பட்டது. இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள் பின்னர் திருத்தப்பட்டுள்ளன, அவை அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தவறு கண்டறியப்பட்டவுடன், முதன்மை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் அதை ஒப்புக்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக, மார்ச் 21 அன்று துணை முதன்மை தேர்தல் அதிகாரி, தவறான ஆவணத்தை திரும்பப் பெறும் அதிகாரப்பூர்வ கடிதத்தை வெளியிட்டார். அந்த அறிவிப்பு அனைத்து அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதி திரும்பப்பெறும் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த அலுவலகப் பிழையை அடிப்படையாகக் கொண்டு தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications