"ஜாதகத்தை நம்பி".. காதலனுக்கு "கஷாயத்தில்" விஷம் கலந்து தந்த காதலி.. திக் வாக்குமூலம்! அதிரும் கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் ஜூஸ் குடித்து இளைஞர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடுக் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாதகத்தை நம்பி தனது காதலனை விஷம் கொடுத்து தான் கொலை செய்ததாக அந்த இளைஞரின் காதலியே போலீஸில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
Recommended Video
கன்னியாகுமரி எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பகுதி பாறசாலை. இந்தப் பகுதியில் உள்ள மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 'ரேடியாலஜி' இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரிக்கு சென்று வரும் வழியில், களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த க்ரீஷ்மா (20) என்ற இளம்பெண்ணுக்கும், ஷோரோன் ராஜுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்குமே அரசல்புரசலாக தெரியும் எனக் கூறப்படுகிறது.

வீட்டிற்கு அழைத்த காதலி..
இந்த சூழலில், கடந்த 14-ம் தேதியன்று தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோன் ராஜை க்ரீஷ்மா அழைத்துள்ளார். அப்போது திடீரென ஷாரோன் ராஜுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஷாரோன் ராஜ் தனது நண்பர் ஒருவருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில், அங்கு வந்த அவர், ஷாரோன் ராஜை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மறுநாள் அவரது வாயில் புண்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஷாரோன் ராஜ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் அண்மையில் இறந்தார்.

'ஜூஸ்தான் காரணம் - கைது செய்யுங்கள்'
இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஷாரோன் ராஜின் காதலியான க்ரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜுக்கு தான் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் க்ரீஷ்மா தெரிவித்தார். மேலும், அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த போது தான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, ஜூஸை குடித்ததால்தான் ஷாரோன் ராஜ் உயிரிழந்ததாகவும், தன்னை கைது செய்யுமாறும் போலீஸாரிடம் க்ரீஷ்மா கதறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்ட போலீஸார், அந்த ஜூஸ் பாட்டில் எங்கே எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், கோபத்தில் அதை தூக்கி பாதாளச் சாக்கடையில் எறிந்துவிட்டதாக கூறினார். இதுதான் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதிரவைத்த வாக்குமூலம்
இதன் தொடர்ச்சியாக, க்ரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீஸார் தொடங்கினர். அப்போதும், தான் கூறிய கதையையே கூறி வந்த க்ரீஷ்மாவிடம் போலீஸார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியது போலீஸாரையே அதிரச் செய்துவிட்டது. க்ரீஷ்மா போலீஸாரிடம் கூறியதாவது: நானும், ஷாரோன் ராஜும் உயிருக்கு உயிராகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்யவும் முடிவு செய்தோம். அப்போதுதான், எங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்தேன். அதை பார்த்த அவர், என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறினார். இதனால், எதிர்காலம் மீது எனக்கு பயம் ஏற்பட்டது. எனவே ஷாரோன் ராஜ் மூலமே எனது ஜாதகத்துக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்தேன்.

கசாயத்தில் விஷம்..
அதன்படி, கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்த நான், என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். அதன்படி, ஒரு கோயிலுக்கு சென்ற நாங்கள், மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்தோம். இது வேறு யாருக்கும் தெரியாது. பின்னர் அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த 14-ம் தேதி ஷாரோனை எனது வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது, எங்கள் வீட்டில் இருந்த கசாயத்தை காய்ச்சி அதில் பூச்சி மருந்தை கலந்தேன். பின்னர், உன்னால் இவ்வளவு கசப்பையும் குடிக்க முடியுமா என்பது போல விளையாட்டாக பேச்சுக் கொடுத்து, இந்த கசாயத்தை குடிக்கச் செய்தேன். அவனும் சவால் என நினைத்து அதை குடித்தான். பின்னர் உடலில் விஷம் ஏறி அவன் இறந்துவிட்டான். இவ்வாறு க்ரீஷ்மா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, போலீஸார் க்ரீஷ்மாவை கைது செய்தனர்.

பெரும் அதிர்ச்சி..
ஜாதகத்தை நம்பி காதலியே தனது காதலனை கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது அதே மூட நம்பிக்கையில் மேலும் ஒரு பயங்கர சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருப்பது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. படித்தவர்கள் நிறைந்த மாநிலம்.. கடவுளின் தேசம்.. என பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட கேரளாவில் இதுபோன்ற மூட நம்பிக்கை கொலைகள் நிகழ்ந்து வருவது மற்ற மாநிலங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications