ஷாரோனை கொல்ல 10 வாட்டி ட்ரை பண்ணேன்.. ஜூஸ் பாட்டிலில் மாத்திரை.. காதலி கிரீஷ்மா பரபர வாக்குமூலம்!
திருவனந்தபுரம் : விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2 மாதங்களில் ஷாரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த ஷாரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு கிரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, ஷாரோனிடம் கடந்த 2 மாதங்களில் 10 முறை கூல்ட்ரிங்ஸில் மாத்திரை கலந்து கொடுத்து கொல்ல முயன்றதாகத் தெரிவித்துள்ளார் கிரீஷ்மா. இத்தகவலைக் கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.

சாவில் மர்மம்
கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன், சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உயிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் தந்தை ஜெயராமன், பாறசாலை போலீசில் புகார் கொடுத்தார். ஷாரோன்ராஜ், ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்ததாகவும், அவரது வீட்டுக்குச் சென்று வந்த பிறகு தான் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் ஷாரோனின் தந்தை தெரிவித்தார்.

அதிர்ச்சி தகவல்கள்
பாறசாலை போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியதாக இருந்ததால், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கிரீஷ்மா, குளிர்பானத்திலும், கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்ததில் தான் ஷாரோன்ராஜ் இறந்ததாக தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ஷாரோனின் காதலி கிரீஷ்மா, அவருக்கு உடந்தையாக தடயங்களை அழித்ததாக அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், காதலன் ஷாரோனை கொலை செய்தததை ஒப்புக்கொண்டார்.

கழற்றிவிட திட்டம்
கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடித்துள்ளனர். ஷாரோனை கழற்றிவிட்டால், அவரால் தனக்கு சிக்கல் ஏற்படும், உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் கசியவிடக்கூடும் என நினைத்த கிரீஷ்மா, அவரிடம் இருந்து நைஸாக விலக முடிவு செய்துள்ளார். தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார், இரண்டாவது தாரமே தங்கும் எனச் சொல்கிறார்கள், உன்னை இழக்க விரும்பவில்லை இப்போது நான் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என சோகமாகப் பேசியுள்ளார். ஆனால், ஜாதகம் எல்லாம் உண்மை இல்லை என ஷாரோன் சமாதானம் செய்ததால், அவரை கழற்றிவிட என்ன வழி எனத் தெரியாமல் யோசித்து, அதன்பிறகே, அவரை கொல்லும் முடிவுக்கு வந்துள்ளார்.

விஷ பாட்டில்
இதற்கிடையே, கிரீஷ்மா, பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதால், அவரிடம் மேற்கொள்ளவிருந்த விசாரணை பாதிக்கப்பட்டது. கிரீஷாமாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை, ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிரீஷ்மாவுக்கு அவரது மாமா வாங்கிக் கொடுத்த விஷ பாட்டில் கைப்பற்றப்பட்டது. விஷ பாட்டில் வீட்டின் ஜன்னலோரமாகவே கிடந்த நிலையில், அதனை ஒளித்து வைக்குமாறு சிந்து கூற, நிர்மல் குமார் ஒரு புதரில் ஒளித்து வைத்ததை ஒப்புக்கொண்டார்.

உடைக்கப்பட்ட சீல்
பின்னர் கிரீஷ்மா வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டபோது, வீட்டிற்கு போலீசார் வைத்த சீல் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தடயங்களை அழிக்க யாரோ முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

3 மாதங்களாக
அப்போது காதலன் ஷாரோனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது எப்படி என கிரீஷ்மா போலீசாரிடம் நடித்துக் காட்டினார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன் ராஜை கொலை செய்ய கிரீஷ்மா கடந்த 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதாகவும், இதற்காக பல இடங்களுக்கு அவரை சுற்றுலா அழைத்துச் சென்று ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் குளிர்பானத்தில் அவ்வப்போது விஷ மாத்திரையை கலந்து கொடுத்ததும் தெரியவந்தது.

ஜூஸ் சேலஞ்ச்
ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், தனது மகன், கிரீஷ்மாவுடன் சென்று வந்த போதெல்லாம் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜூஸ் சேலஞ்ச் என கிரீஷ்மா விஷம் கொடுத்து வந்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. 2 கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை வாங்கி ஒன்றை தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை காதலன் ஷாரோன் ராஜிடம் கிரீஷ்மா கொடுத்து விடுவாராம். இருவரில் முதலில் யார் அதனை குடித்து முடிப்பது என ஜூஸ் சேலஞ்ச் நடத்தி உள்ளனர். இதில் ஷாரோன் ராஜுக்கு கொடுத்த குளிர்பானத்தில் மட்டும் விஷம் கலந்து உள்ளார் கிரீஷ்மா. அப்பாவியான ஷாரோனும், பாட்டில் பாட்டிலாக ஜூஸை குடித்து விட்டு வீட்டில் வந்து வயிற்று வலியால் துடித்துள்ளார்.

கையில் 2 ஜூஸ் பாட்டில்
ஷாரோனுடன் கிரீஷ்மா இருக்கும் புகைப்படங்களில் அவர் 2 குளிர்பான பாட்டில்களை கையில் வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த தகவல்களின் அடிப்படையில், கிரீஷ்மாவை அவர் ஷாரோன் ராஜுடன் சென்ற சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். அதன்படி அப்பகுதிகளில் கடந்த சில மாதங்களில் எப்போதெல்லாம் அவர் ஜூசில் விஷம் கலந்து கொடுத்தார் என சம்பவ இடங்களுக்கே அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 முறை கொல்ல முயற்சி
காளிகேசத்தில் அறை எடுத்து தங்கியது குறித்து விசாரணை நடத்திய போலீசார், இன்று ஷாரோன் படித்துவந்த கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிரீஷ்மா அளித்த வாக்குமூலத்தின்படி, கடந்த 2 மாதங்களில் காதலன் ஷாரோனை 10 முறை ஜூஸில் மாத்திரை கலந்து கொடுத்து கொல்ல முயன்றதாக கிரீஷ்மா தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications