வளைகுடா போரால் கேரளாவில் தோற்கும் காங்கிரஸ்? இது என்ன புதுசா இருக்கு.. ராகுல் பாவம் தான்
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழவில் இறுதிக்கட்ட பணிகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையே வளைகுடாவில் வெடித்துள்ள போரால் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம் எனச் சொல்கிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்குக் குறைந்தபட்சம் 71 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். இந்த முறை கேரளாவில் மிகக் கடுமையான போட்டி இருக்கிறது.

வளைகுடா போர்
இதனால் அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இன்றுடன் கேரளாவில் பிரச்சாரம் முடியும் நிலையில், அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே வளைகுடாவில் நடந்து வரும் போர் கேரளா தேர்தலையும் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக இது அங்குக் காங்கிரஸின் வெற்றியைப் பாதிக்கிறதாம்.
கேரளா தேர்தல்
வடக்கு கேரளாவில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மலபார் பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இதுபோல வளைகுடா நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், குறிப்பாக அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு கோட்டையாக இருக்கிறார்கள்.. வழக்கமாகத் தேர்தலின் போது 60% வளைகுடா வாழ் மலையாளிகள் கேரளாவுக்கு வந்து வாக்களிப்பார்கள். அவர்களுக்குக் காங்கிரஸ் ஆதரவு அமைப்புகள் சிறப்பு விமானங்களைக் கூட ஏற்பாடு செய்து கொடுக்கும்.
இடதுசாரிகளுக்கும் கூட வளைகுடாவில் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், அது காங்கிரஸ் அளவுக்கு இல்லை என்பதால் அவர்களுக்குப் பெரிய இழப்பு இல்லை. இடதுசாரிகள் வாக்காளர்கள் பெரும்பாலும் கேரளாவிலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாக்களிப்பதில் எந்தவொரு சிக்கலும் இருப்பதில்லை. வளைகுடாவில் இருந்து வருவோரில் மிகக் குறைவானவர்களே இடதுசாரிகளுக்கு வாக்களிப்பார்கள் என்பதால் இதில் அவர்களுக்குப் பாதிப்பு குறைவு!
காங்கிரஸுக்கு பாதிப்பு
வளைகுடாவில் உள்ள அமைப்புகள் காங்கிரஸ் சார்பு அமைப்புகளுடன் நெருக்கமாக உள்ளது. எனவே, வளைகுடா போர் காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வளைகுடாவில் வசிக்கும் மலையாளிகளில் 60% பேர் வாக்களிப்பார்கள். ஆனால் இந்த முறை விமான சிக்கல், எரிபொருள் விலை உயர்வால் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் வெறும் 10% மட்டுமே வாக்களிக்க வருவார்கள் எனத் தெரிகிறது. இது காங்கிரஸுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வளைகுடாவில் இருந்து வரும் 60 முதல் 70% வரையிலான வாக்காளர்களைக் காங்கிரஸ் இழக்கும். இது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
என்ன நடக்கும்!
குறிப்பாக வடக்கு கேரளா அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அங்குள்ள பல தொகுதிகள் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்படும். குட்டியாடி, பெரிந்தல்மன்னா போன்ற தொகுதிகளில் வெளிநாட்டு வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படும்போது, அந்த வெளிநாட்டு வாக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது. இது பாதிக்கப்படுவதே காங்கிரஸுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
வளைகுடாவில் இருந்து வருவது குறைவான வாக்குகள் தான் என்றாலும் போட்டி மிகக் கடுமையாக இருப்பதால் இது காங்கிரஸ் ஆட்சி கனவையே கூட பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications