வாழத் தகுதியற்ற பூமி வயநாடு? பேரிடர் பொறியாளர் உடைத்த உண்மை? விடிவு காலம் வருமா?

Subscribe to Oneindia Tamil

கேரளா: வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவுக்கு முக்கியமான காரணம் என்ன? தவறு எந்த இடத்தில் நடந்துள்ளது? பேரிடர் மேலாண்மையில் இந்தியா முன்னேறவில்லையா? போன்ற பல கேள்விகளுக்குப் பேரிடர் மேலாண்மை பொறியாளர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. இந்த இயற்கைப் பேரிடரால் சுமார் 3 கிராமங்கள் அடியோடு காணாமல் போய் உள்ளன. அங்கே மீட்புப் பணிகளை மாநில அரசின் பேரிடர் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகள் களமிறங்கி தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

wayanad Kerala

வயநாடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மிக அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கே ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களால் அமைத்து, அங்கே வேலை செய்வதற்காக மக்களைக் குடியேற வைத்துவிட்டனர். படிப்படியாக வளர்ந்து இந்த அடர்ந்த காடு ஒரு கட்டத்தில் நகரமயமாகிவிட்டது. நிறைய உல்லாச விடுதிகள், தங்கும் விடுதிகள் எனக் கட்டப்பட்டு காடு அழிக்கப்பட்டு விட்டது. கடந்த 2019இல் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கே அது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டடங்கள் அமைப்பதற்காக மலைப் பகுதியில் தொடர்ச்சியாகத் தோண்டப்பட்டு வந்ததும் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இப்படிப் பல முன் அனுபவங்கள் இருந்தும் அரசு இந்த விசயத்தில் முன் எச்சரிக்கையோடு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகம் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. வயநாடு நிலச்சரிவு பற்றி பேரிடர் மேலாண்மை பொறியாளர் பிரபு காந்தி ஜெயின் பேசுகையில், "சரியாகச் சொல்லப் போனால் பேரிடர் மேலாண்மையைக் கையாளுகின்ற அளவுக்கு நம் நாட்டில் முறையான உபகரணங்கள் இல்லை. அதற்கான முன்னேற்பாடுகளை நாம் இதுவரை கவனம் செலுத்தவே இல்லை.

ஆண்டுக்கு ஒருமுறை எப்படி தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வருகின்றனவோ அதைப்போல இனிமேல் நிறையப் பேரிடர்களை நாம் சந்திக்க இருக்கிறோம். பொதுவாக வெளிநாடுகளில் ஒரு நகரத்தின் உட்கட்டமைப்பை முறையாக உருவாக்கிய பிறகுதான் மக்கள் குடியேற்றத்தை அனுமதிப்பார்கள். இந்தியாவில் என்ன நடக்கிறது என்றால், முதலில் குடியேற்றம் நடந்த பிறகு உட்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவே அடிப்படையில் தவறு. இதுவே முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகிறது.

மத்திய அரசு இதற்குப் பிறகு வயநாடு பகுதியை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளை எடுக்கக் கூடாது. அதை வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும். கடந்த 2 வாரக் காலமாக வயநாட்டில் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 15 நாட்கள் தொடர் மழை. அந்த நீர் என்ன ஆகும்? மலைப்பகுதி நிலத்தின் வழியாக உள்ளே போகும். அது ஊற்றாக அப்படியே அடிவாரத்தில் மற்றொரு பகுதியில் வெளியேறும். அங்கே நிலச்சரிவு ஏற்படும். இந்த நிலச்சரிவு நடப்பது முதன்முறை அல்ல. 2019இல் ஏற்பட்டது.

அடுத்து 2021இல் நிகழ்ந்தது. இப்போது 2024இல் மீண்டும் நிலச்சரிவை நாம் சந்திக்கிறோம். இதன் மூலம் இயற்கை சொல்வது என்ன? தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் ஆபத்து வர இருக்கிறது என்பதைத்தான். அதைப் புரிந்துகொள்ளாமல் வெறும் ஐஏஎஸ் அதிகாரிகளை மீட்புப் பணிக்கு அனுப்புவதன் மூலம் நடக்கப் போவது என்ன? அந்த அதிகாரிகளுக்குப் பேரிடர் மேலாண்மை பற்றி போதுமான புரிதலே இல்லை.

தொடர்ச்சியாக மழையை வயநாடு சந்திக்க தொடங்கிய போது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், மிகப்பெரிய நிலச்சரிவு உண்டாகும் வரை மக்கள் அங்கேயே இருந்துள்ளனர். பாதுகாப்பான பகுதிகளுக்கு அவர்களை அரசு கொண்டு போகவே இல்லை. மொத்தமே 4 ஆயிரம் மக்கள்தான் அங்கே வசித்து வருகிறார்கள். அவர்களை அரசு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போக முடியாதா? ஆக, வயநாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு என்பது அரசு நிர்வாகம் செயல் இழந்துபோய் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு தூத்துக்குடியில் மழைபெய்த போது 10 ஆயிரம் மக்களை வெறும் 4 மணிநேரத்தில் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்படிப் பார்த்தால் இந்த 4 பேரை ஒரே நாளில் கூட பாதுகாப்பான முகாம்களில் கொண்டு போய் தங்க வைத்திருக்கலாம். அப்படித் தங்க வைக்கும்போது பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 10 கிமீட்டர் தொலைவில் முகாம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வயநாடு அரசு அதிகாரிகள் வயநாடு பகுதிக்குள்ளாகவே வேறு ஒரு முகாமில் தங்க வைத்துள்ளனர். மழை தொடர்ச்சியாக இருந்ததால், அந்த முகாம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகள் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டாலும் அதை மீட்க முடியும் எனச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அதே மாதிரி நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை ஒட்டி கட்டடங்களைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டால் அவற்றை அப்புறப்படுத்த ஏதுவாக சட்டம் இயற்ற வேண்டும். பேரிடர் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வேகமாகச் செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

கேரளாவில் கயிறு கட்டி மீட்பதை நாம் பார்க்கிறோம். என்ன கொடுமை இது? புல்லட் ட்ரெயின் மூலம் மீட்புப் பணி நடக்கும் காலம் இது. ஹைப்பர் லூப் என்ற டெக்னாலஜி வந்துவிட்டது. அதில் சென்னையிலிருந்து 40 நிமிடத்தில் பெங்களூரு போய் விடலாம். மெட்ராஸ் ஐஐடியில் பல விதமான ட்ரோன்ஸ் வசதிகள் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம். அந்த ட்ரோன்ஸ் வெறுமனே மேல் இருந்து ஏரியல் வியூவ் படம் மட்டும் எடுத்து அனுப்பாது. மணலில் புதைந்துள்ள மனிதர்களின் உடலை உணர்ந்து உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? எனத் தகவல் சொல்லும். அதைவிட்டு விட்டு மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது மோசமான அணுகுமுறை.

வயநாடு பல முறை ஏற்கெனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள போது, முன்பே அங்கே தற்காப்பு உபகரணங்களுக்கான முகாமை எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள்" என்கிறார் ஆவேசமாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+