நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது எப்படி? காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் மேஜர் தகவல்
திருவனந்தபுரம்: ஏமன் நாட்டில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்திவைப்பதில் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாருக்கு முக்கிய பங்கு இருந்தது. அவர் தனது மத அறிஞர்கள் மூலம் ஏமன் அதிகாரிகளுடன் பேசியதாலேயே மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஏமன் நாட்டில் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' என்று அழைக்கப்படும் சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

மரண தண்டனை நிறுத்திவைப்பு
இதற்கிடையே நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதில் தனது தலையீட்டிற்குப் பலன் கிடைத்துள்ளதாக காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் தெரிவித்துள்ளார். ஏமன் மத அறிஞர்கள் மூலம் தான் எடுத்த முயற்சியால் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க முயன்றதாகவும் அனைத்திந்திய ஜமிய்யதுல் உலமா பொதுச் செயலாளர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் கூறியிருக்கிறார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மனித உயிரைக் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நிமிஷா பிரியா வழக்கில் தலையிடுமாறு ஏமன் மத அறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாக அவர் கூறினார்.
ரத்த பணம்
அவர் மேலும் கூறுகையில், "எங்கள் வேண்டுகோளின் அடிப்படையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏமன் அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வத் தகவல் வந்துள்ளது. அவர் பாதுகாப்பாக விடுதலை பெற அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மஹ்தி குடும்பத்தினர் இழப்பீடு பெற்றுக்கொண்டு மன்னிக்கச் சம்மதித்தால் ரத்தப் பணம் உடனடியாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிமிஷா பிரியாவை காப்பாற்றத் தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மத்திய அரசுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்ததாகவும் அபூபக்கர் முஸ்லியார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் எங்கள் அறிஞர்கள் மூலம் முயற்சிகளை எடுத்தோம். இந்த முயற்சிகளை விளக்கி பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதமும் எழுதியிருக்கிறோம். எங்கள் முயற்சி குறித்து பிரதமர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.
மனிதாபிமான அடிப்படையில்
இந்த விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே நான் தலையிட்டேன். பொதுவாக மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் நாங்கள் மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. இந்து, முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லை. நாங்கள் மனிதக் குலத்திற்காக நிற்கிறோம்," என்று கூறினார்.
தண்டனை வழங்குவதா அல்லது மன்னிப்பதா என்ற இறுதி முடிவை அந்நாட்டு அதிகாரிகள் தான் எடுக்க வேண்டும். வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பல்வேறு மனிதாபிமானக் கவலைகளை எழுப்புகிறது. தண்டனை விதிக்கப்பட்ட நபர் தனது குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நல்ல சரியான முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன்.
அடுத்து என்ன!
மஹ்தியின் குடும்பத்தினர் கருணை காட்டவும், ரத்தப் பணத்தை ஏற்றுக்கொள்ளவும் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். அதன் மூலம் நிமிஷா பிரியாவின் பாதுகாப்பான விடுதலைக்கு வழி வகுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மஹ்தி குடும்பத்தினரைச் சந்திப்பதும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுமே பெரும் சிக்கலாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது குறித்தும் அபூபக்கர் முஸ்லியாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இது இரண்டு நிமிடங்களில் முடிவு எடுக்கக்கூடிய விஷயமல்ல. இயல்பாகவே, இதற்கு அதிக நேரம் எடுக்கும். மேலும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருந்தது" என்றார்












Click it and Unblock the Notifications