கேரளாவில் அமைகிறது காங்கிரஸ் ஆட்சி.. பினராயி விஜயன் அரசு மீது கடும் கோபத்தில் மக்கள்.. புதிய சர்வே
திருவனந்தபுரம்: கேரளாவிலும் தமிழகத்தை போல விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு எந்த கட்சிக்கு ஆட்சியைப் பிடிக்கும் என்பது தொடர்பாக வோட் வைப் அமைப்பின் சர்வே வெளியாகியுள்ளது. அதில் பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இடதுசாரி அரசு மீது அதிருப்தி அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போலவே நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் முதல்வராக இருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக அங்கு இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் நிலையில், அரசு மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

சர்வே
இதற்கிடையே கேரளாவில் இப்போது மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக வோட் வைப் என்ற அமைப்பு சர்வே நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அங்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை (LDF) விட காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வேயில் சுமார் 52% பேர், இடதுசாரிகள் அரசின் செயல்பாட்டை "மோசம் முதல் மிக மோசம்" என்று மதிப்பிட்டுள்ளனர். வெறும் 34.5% பேர் மட்டுமே அரசின் செயல்பாட்டில் திருப்தி தெரிவித்துள்ளனர். சுமார் 11% பேர் ஆட்சி சுமாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸுக்கு வாக்கு
தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்குக் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்கு என அதிக மக்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸின் UDF கூட்டணி 32.7% பேர் வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். இடதுசாரிகளின் LDF கூட்டணி 29.3% வாக்குகள் பெற்றுப் பின்தங்கி இருக்கிறது. இதன் மூலம் அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருப்பதும் அதில் காங்கிரஸ் கூட்டணிக்கு முன்னிலை இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
பாஜக நுழைய முடியாத மாநிலங்களில் ஒன்றாக கேரளாவும் இருக்கும் சூழலில், சுமார் 19.8% பேர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகச் சொல்லியுள்ளனர். பாஜக கூட்டணி அங்கு 3வது இடத்தில் பெற்றாலும் குறைந்த வாக்குகளையே பெறும் என வோட் வைப் சர்வே தெரிவித்துள்ளது.
முதல்வர் வேட்பாளர்
முதலமைச்சர் வேட்பாளர் பந்தயத்தில், காங்கிரஸ் கட்சியின் வி.டி. சதிசன் 22.4% வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன் 18% வாக்குகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். சி.பி.எம். தலைவரும் முன்னாள் கேரள சுகாதாரத் துறை அமைச்சருமான கே.கே. சைலஜா 16.9% வாக்குகளுடனும் 3வது இடத்தில் இருக்கிறார். பாஜகவின் ராஜீவ் சந்திர சேகர் 14.7% வாக்குகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார். இவர்கள் 4 பேருக்கு மட்டுமே 10%க்கு மேல் வாக்குகள் உள்ளன.
சிக்கல்கள் என்ன
கேரளாவில் வாக்காளர்களின் முதன்மையான பிரச்சினைகளாக விலைவாசி உயர்வு, ஊழல், மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை உள்ளன. வயதுவாரியாகப் பார்க்கும்போது, 18-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாக இருக்கிறது. அதேநேரம் 35-54 வயதுடைய வாக்காளர்கள் தற்போதைய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். பாலின ரீதியாகப் பார்க்கும்போது 39% ஆண்கள் காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாகவும், 32% பெண்கள் இடதுசாரிகள் கூட்டணிக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
ஆட்சிக்கு எதிரான மனநிலை இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. 47% வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு மீண்டும் வாக்களிக்க விரும்பவில்லை என்கிறார்கள். 28% பேர் மட்டுமே தற்போதைய எம்எல்ஏக்களை மீண்டும் ஆதரிக்க விரும்புகிறார்கள்.
காங்கிரஸ்
அதேபோல காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவில் உள்ள பிரதானச் சிக்கல் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதில் வழக்கம் போலக் காங்கிரஸுக்கு உட்கட்சி மோதலே வில்லனாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் 42% மக்கள் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கோஷ்டி அரசியலே காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சவால் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பலவீனமான பிரச்சாரம் (8.5%) மற்றும் கவர்ச்சிகரமான தலைவர் இல்லாதது (7.5%) அடுத்தடுத்த காரணங்களாக உள்ளன.
பாஜகவால் கேரளாவில் வளர முடியாமல் போக என்ன காரணம் என்ற கேள்விக்குச் சுமார் 23% பேர் மாநிலத்தின் உள்ளூர் அரசியல் சூழலைப் புரிந்து கொள்ளத் தவறுவது எனக் கூறியுள்ளனர். சிறுபான்மை மக்கள் அதிகம் இருப்பது, மக்களை ஈர்க்கும் தலைமை இல்லாதது ஆகியவை அடுத்தடுத்து காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications