திக்திக்.. தோற்பது போல் சென்று அமோகமாக வென்ற முதல்வர் பினராயி விஜயன்.. கேரளாவில் நடந்த ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் கடைசி கட்ட ரவுண்ட்டுகளில் அதிரடியாக முன்னேறி வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் 85,614 ஓட்டுகள் வாங்கி வென்றார்.
கேரளா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் முதல்வராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் பினராயி விஜயன் கடந்த 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் சிட்டிங் எம்எல்ஏவாக 3வது முறையாக பினராயி விஜயன் களமிறங்கினார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அப்துல் ரஷீத், பாஜக சார்பில் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பினராயி விஜயன் முன்னிலை வகித்தார். ஆனால் அதன்பிறகு பின்தங்கினார். அடுத்தடுத்து ரவுண்ட்டுகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத்திடம் பின்தங்கினார்.
காலை 11 மணி நிலவரப்படி 5 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் 27,869 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். பினராயி விஜயன் 26,779 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து இருந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 1,090 ஆகும். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஞ்சித் மொத்தம் 5,232 வாக்குகள் வாங்கி 3வது இடத்தில் இருந்தார்.
அதன்பிறகு பினராயி விஜயன், அப்துல் ரஷீத் ஆகியோர் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் பினராயி விஜயன் முந்தினார். கடைசியாக பினராயி விஜயன் மொத்தம் 85,614 ஓட்டுகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் 66,367 ஓட்டுகள் வாங்கி 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஞ்சித் 18,555 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்த தொகுதியில் கடந்த 2016ல் முதல் முறையாக போட்டியிட்டபோது அவர் முதல்வரானார். 2வது முறையாக 2021ல் இந்த தொகுதியில் வென்று மீண்டும் முதல்வராக தொடர்ந்தார். ஆனால் இந்த முறை பினராயி விஜயன் வெற்றி பெற்றிருந்தாலும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. இதனால் அவர் எம்எல்ஏவாக தொடர உள்ளார்.












Click it and Unblock the Notifications