ஷாரோன் ராஜ் கொலை வழக்கு! கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாறசாலையில் காதலன் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றங்கரை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. அதே போல் கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமாவுக்கு நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கிரீஷ்மாவும் அவரது மாமா நிர்மல் குமாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட தரப்புக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

வழக்கின் பின்னணி: கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (25). இவர் குமரி மாவட்டம், நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்து வந்தார்.
கிரீஷ்மா, கல்லூரி மாணவியாவார். இருவரும் காதலித்து வந்த நிலையில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று ஊர் சுற்றியதாகவும் தனிமையில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஷாரோன் ராஜுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் 11 நாட்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தங்களுடைய மகனுக்கு அவருடைய காதலி கிரீஷ்மாதான் விஷம் கொடுத்து கொலை செய்தார் என அவரது பெற்றோர் பாறசாலை போலீஸில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இந்த வழக்கானது திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜை காதலி கிரீஷ்மா தனது வீட்டிற்கு வரவழைத்தது தெரியவந்தது. மேலும் ஷாரோன் ராஜுக்கு கசாயத்தில் விஷம் கலந்து குடிக்க செய்ததும் தெரியவந்தது.
கிரீஷ்மாவுக்கு அவருடைய தாய் சிந்துவும் தாய்மாமா நிர்மல் குமாரும் பணக்கார இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்தனராம். ஆனால் கிரீஷ்மாவோ ஷாரோனை காதலித்தார். பணக்கார மாப்பிள்ளை விவகாரம் குறித்து கிரீஷ்மாவிடம் கூறிய சிந்துவும் நிர்மல் குமாரும் ஷாரோனை மறந்துவிடுமாறு கூறியிருந்தனர்.
கிரீஷ்மாவும் பணத்திற்கு ஆசைப்பட்டு, ஒப்புக் கொண்டார். ஆனால் அவரும் தானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவரிடம் இருப்பதால் அதை புது மாப்பிள்ளையிடம் காட்டிவிட்டால் சிக்கலாகிவிடும் என கிரீஷ்மா தெரிவித்திருந்தார்.
அதற்கு சிந்துவும் நிர்மல் குமாரும் ஸ்லோ பாய்சன் கொடுத்து அவரை கொன்றுவிடுமாறு கூறினராம். இதை கேட்ட கிரீஷ்மாவும் , ஷாரோனுக்கு போன் செய்து வீட்டில் யாரும் இல்லை என்பதால் அங்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஏதோ கசாயம் என கூறி ஒரு ஜூஸை ஷாரோனுக்கு கிரீஷ்மா கொடுத்துள்ளார்.
அதை குடித்தது முதல் தனது உடலுக்கு ஏதோ செய்வதாக தனது நண்பரிடம் ஷாரோன் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீஸார் கிரீஷ்மா, தாய் சிந்து, நிர்மல் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு நெய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கில் ஜனவரி 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ஜனவரி 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில் ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மாவும் விஷம் வாங்கிக் கொடுத்த தாய்மாமா நிர்மல் குமாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்துவை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. இந்த நிலையில் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று வழங்கப்பட்டது.
அதில் கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமா நிர்மல்குமாரன் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications