"டார்ச்சர்.." வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜ்.. மறுநாளே கொடூர பலி.. விஸ்மயா மரணத்தின் அதிர்ச்சி பின்னணி!
திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்மயா என்ற பெண்ணின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், அவரின் வாட்ஸ் ஆப் சாட்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாட்ஸ் ஆப் சாட்கள் காரணமாக இது கண்டிப்பாக கொலையாக இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
Recommended Video
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது பெண் நேற்று அவரின் கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
10-20 லட்சம் ரூபாய் கூடுதலாக வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் கொடுமை படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்மமான முறையில் பலியாகி கிடந்த விஸ்மயாவின் உடல் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இந்த நிலையில் விஸ்மயாவின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் விஸ்மயாவின் வாட்ஸ் ஆப் சாட்கள் வெளியாகி உள்ளன. தனது சகோதரருக்கும், சித்தப்பா வழி தம்பிக்கும் விஸ்மயா தனது கணவர் குறித்து புகார் அளித்து நிறைய மெசேஜ்களை அனுப்பி உள்ளார். மலையாளத்தில் இருக்கும் இந்த மெசேஜ்கள் கேரளாவை உலுக்கி உள்ளது. விஸ்மயா என்ற 24 வயது பெண் அனுபவித்த கொடுமைகள் இந்த மெசேஜ்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மெசேஜ்
விஸ்மயா தனது தம்பிக்கு அனுப்பிய மெசேஜ் ஒன்றில், என்னுடைய முடியை பிடித்து கிரண் இழுத்து அடித்தார். என் முடியை இழுத்து பின் அதை கதவில் வேகமாக முட்டினார். என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு மெசேஜில் வீட்டுக்குள் வந்ததும் கதவை சாத்திவிட்டு என்னை அடிப்பார், என்னை அதிகம் அடித்துவிட்டார் இன்று.. என்னால் இனியும் டார்ச்சர்களை தாங்க முடியாது என்று விஸ்மயா குறிப்பிட்டுள்ளார்.

வீங்கிய கண்கள்
அதோடு விஸ்மயா தனக்கு ஏற்பட்ட காயங்களையும் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டுள்ளார். முகத்தில் பல இடங்களில் விஸ்மயாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெரிதாக வீங்கிய கண்கள் கொண்ட புகைப்படம் ஒன்றையும் விஸ்மயா பகிர்ந்து உள்ளார். கட்டையால் கண்களில் கிரண் தாக்கியதாக விஸ்மயா இந்த புகைப்படத்தை தனது தம்பியிடம் பகிர்ந்து முறையிட்டு இருக்கிறார்.

அதிர்ச்சி
ஆணிகளை வைத்து தன்னை மோசமாக தாக்கி கிரண் அடித்ததாக விஸ்மயா வாட்ஸ் ஆப் சாட்டில் குறிப்பிட்டுள்ளார். வரதட்சணை கேட்டு விஸ்மயா தினமும் இப்படி தாக்கப்பட்டு வந்த நிலையில்தான் நேற்று மர்மமான முறையில் வீட்டிலேயே பலியாகி கிடந்தார். கணவர் வீட்டில், தனது அறையிலேயே பலியாகி கிடந்தார். இவர் தூக்கு மாட்டிக்கொள்ளாத நிலையில், கண்டிப்பாக இது கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் சந்தேகிறார்கள்.

முதல்நாள்
முக்கியமாக திங்கள் கிழமை விஸ்மயா உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவுதான் விஸ்மயா, தன்னை மோசமாக கிரண் அடிக்கிறார் என்று கூறி வாட்ஸ் ஆப்பில் தனது தம்பிக்கு புகைப்படங்களை அனுப்பி உள்ளார். இதனால் கண்டிப்பாக விஸ்மயாவின் மரணம் கொலைதான் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications