“ஆமா.. இவ்ளோ சிப்ஸை வச்சு என்ன பண்ண போறீங்க?” பங்கமாய் கலாய்த்த அமைச்சர்.. ரிசர்வ் வங்கிக்கு கேள்வி
திருவனந்தபுரம்: கடந்த 2016ம் ஆண்டு புதியதாக 2,000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டியும் ரிசர்வ் வங்கி நடவடிக்கையை கலாய்த்திருக்கிறார்.
நாடு முழுவதும் கருப்பு பணம் அதிகரித்து விட்டதாகவும், இதனை ஒழிக்க அதிரடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்றும் மத்திய அரசு அடிக்கடி கூறி வந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார்.

மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசைகள் மக்கள் காத்திருந்தனர். மறுபுறம், பெரும் பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏஜென்ட்டுகளை பயன்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்தனர். இவையனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் செய்த தியாகம் என்று சொல்லப்பட்டது.
இப்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட இந்திய கிராமங்களில் ஒரு நாள் வருவாய் 100 ரூபாய் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது 2,000 ரூபாய் நோட்டுக்கான தேவை எதுவும் பெரியதாக எழவில்லை.
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பாத்தியம் வாங்குபவர்கள் மட்டுமே இந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தினர். ஆனால் இவர்களின் எண்ணிக்கை சிறு அளவுதான். காலப்போக்கில் 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்றுவதை விட 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதே அவர்களுக்கு வசதியாக இருந்தது. ஏனெனில் இவர்களை தவிர யாரும் 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கவில்லை என்பதால் அதை எளிய வியாபாரிகள், மக்கள் பெற தயங்கினர். ஆக இப்படியாக கடைசியில் இவர்களிடமும் இந்த ரூபாய் நோட்டுக்கள் புழங்குவது நின்று போனது.
அதன் பின்னர் ஏடிஎம்களிலும் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டுகளில் இந்த ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் இந்த ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை ரிசர்வ் வங்கி உணர்ந்துள்ளது. இதனையடுத்து 'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தோல்வியடைந்த ஒன்று என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, "இவ்வளவு சிப்ஸ்களை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?" என்று கிண்டலடித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, "இந்த நோட்டில் சிப் வைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை பதுக்கினால் அதை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடித்துவிட முடியும்" என்று பாஜக ஆதரவாளர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications