கேரளாவில் ஆட்சி மாற்றம்? முஸ்லிம் - கிறிஸ்தவர்களின் ஓட்டு யாருக்கு தெரியுமா? டிரெண்ட் சொன்ன மேட்டர்
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள மொத்த வாக்காளர்களில் 47 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று சிறுபான்மையினராக உள்ளனர். இவர்கள் யாருக்கு வாக்களித்தனர்? என்பது பற்றியும், கேரளாவில் ஆட்சி மாற்றம் நிகழுமா? என்பது பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் எனும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வந்தது. இந்த 10 ஆண்டுகளிலும் முதல்வராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கேரளாவில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் தற்போது மும்முனை போட்டி உள்ளது. நேற்றைய தேர்தலில் மொத்தம் 78.27 சதவீத அளவுக்கு ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது கடந்த சட்டசபை தேர்தலை விட அதிகம். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்முனை போட்டி
ஆளும் கூட்டணியான எல்டிஎஃப் எனும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வகிக்கிறது. அதேபோல் யுடிஎஃப் எனும் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. என்டிஏவிற்கு பாஜக தலைமை வகிக்கிறது. இந்த 3 கூட்டணிகள் இடையே தான் போட்டி. இதில் நேரடி போட்டி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடிப்படையில் அங்குள்ள டிரெண்ட் பற்றிய முக்கிய தகவல்களை அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
47 சதவீதம் பேர் சிறுபான்மையினர்
அதாவது கேரளாவை எடுத்து கொண்டால் சிறுபான்மையின மக்கள் அதிகம். அதிகளவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளில் பாதிக்கு பாதி சுமார் 70 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக சிறுபான்மையின மக்கள் தான் உள்ளனர். புள்ளி விவரமாக பார்க்க வேண்டும் என்றால் கேரளா மக்கள்தொகையில் 47 சதவீத மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
அதாவது கேரளா மக்கள்தொகையில் சுமார் 26.6 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இவர்கள் 40 முதல் 47 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தான் 25 முதல் 27 தொகுதிகளில் போட்டியிட்டு தற்போது 15 இடங்களில் வென்றுள்ளது.
கிறிஸ்தவர்கள் என்று பார்த்தால் கேரளா மக்கள் தொகையில் சுமார் 18.4 சதவீதம் பேர் உள்ளனர். குறிப்பாக கேரளாவின் மத்திய மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர். 25 முதல் 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக கிறிஸ்தவர்களின் வாக்குகள் உள்ளன. இதனால் தான் 70 தொகுதிகள் வரை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிப்பதாக இருக்கின்றன.
மலபார் பிராந்தியத்தில் காங்கிரஸ்
இந்நிலையில் தான் தற்போது ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பது என்பது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதோடு அதிகரித்த இந்த வாக்கு சதவீதம் மாநிலத்தை ஆட்சியை மாற்றியமைக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
இதில் மலபார் பிராந்தியம் என அழைக்கப்படும் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மலபார் பிராந்தியத்தில் மலப்புரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்த மாவட்டங்கள் கைக்கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் போல்...
இதனை தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் கூறின. மலபார் பிராந்தியத்தில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு 25 முதல் 34 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்டிஎஃப் கூட்டணிக்கு 14 முதல் 23 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவை எதிரொலிக்கும் வகையில் உள்ளது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் இந்த சட்டசபை தேர்தல் முடிவும் அதேபோல் அமையலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரெண்ட் மாறுவது ஏன்?
இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் யுடிஎஃப் கூட்டணி "ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்" மற்றும் "எஸ்டிபிஐ" உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் அரவணைத்தது தான் என கூறப்படுகிறது.. இது தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மீதான அதிருப்தி ஓட்டுகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது. இதுவும் காங்கிரஸ் கூட்டணிக்கு முன்னிலையை வழங்குவதாக அமைந்துள்ளது.
அதேபோல் கண்ணூர் என்பது முதல்வர் பினராயி விஜயனின் கோட்டை. ஆனால் தற்போது அங்கு உள்கட்சி பிரச்சனைகள் அதிகம் உள்ளன. இதனால் அதிருப்தியாளர்கள் பலரும் தேர்தலில் மாற்றி ஓட்டளித்து இருக்கலாம். இதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு சரிவை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் யாருக்கு?
அதேபோல் கிறிஸ்தவர்கள் கேரளாவின் மத்திய மாவட்டங்களில் நிறைந்து உள்ளனர். கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுபற்றி அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ''சர்ச்சுகளின் உள்அரசியல் காரணமாக கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் பிளவுப்பட்டுள்ளது. ஜேக்கபைட் பிரிவு கிறிஸ்தவர்கள் (Jacobites) பெரும்பாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்கள் அதனை செய்துள்ளனர்.
அதே நேரத்தில், ஆர்த்தடாக்ஸ் பிரிவு (Orthodox Faction) தங்களுக்குச் சாதகமான நீதிமன்ற உத்தரவுகளை அரசு முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்று கூறி அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதனால் புதுப்பள்ளி மற்றும் செங்கண்ணூர் போன்ற இடங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு அவர்களின் ஓட்டுகள் கிடைத்து இருக்கலாம்.
மேலும் கடலோரப் பகுதிகளில் லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் (Latin Catholic Community) உள்ளனர். இவர்கள் கடலோரப் பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினரின் குறைகள் குறித்த ஜேபி கோஷி கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறினர். இங்கு பாஜக கூட்டணியில் கிறிஸ்தவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் கணிசமான ஓட்டுகளை கைப்பற்றுவார்கள். இந்த தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றாலும், சில கிறிஸ்தவப் பகுதிகளில் 12 முதல் 15 சதவீதம் வரையிலான வாக்குச் சதவீதத்தை பாஜக பெற வாய்ப்புள்ளது. இது காங்கிரஸ் தலைமையிலான் யுடிஎஃப் கூட்டணிக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்'' என தெரிவித்துள்ளனர்.
ஆட்சி மாறுமா?
டிரெண்ட் இப்படி இருந்தாலும் கூட கேரளாவில் ஆட்சி மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும். உண்மையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் நூலிழையில் முன்னணி வகிக்க வாய்ப்புள்ளது. இதற்கு கடந்த 10 ஆண்டு காலமாக இடதுசாரி கூட்டணியின் ஆட்சியின் மீதான அதிருப்தி காரணமாக அமையலாம் என்கின்றனர் நிபுணர்கள். மாறாக பாஜகவின் கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காது எனவும், ஆனால் முந்தைய முறையை ஒப்பிடும்போது பாஜக அதிகமான வாக்குகளை பெறும் எனவும் அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications