சபரிமலையில் நெரிசலில் சிக்கி.. பெண் பக்தர் உயிரிழப்பு! தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 58 வயது மதிக்கத்தக்க பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் தரிசனம் செய்திருக்கின்றனர். இவர்களில் 85,000 பக்தர்களை மட்டுமே அடையாளப்படுத்த முடிந்ததாகவும், மற்றவர்களை அடையாளப்படுத்த முடியவில்லை என்றும் தேவசம் போர்டு கூறியிருக்கிறது. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி. ஆனால், பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

எண்ணிக்கை அதிகரித்ததால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பக்தர்கள், கோயில் அருகே உள்ள நடைப் பந்தலில் தடுப்புகளைத் தாண்டி பதினெட்டாம் படி நோக்கிச் சென்றனர். இதனால் புனித படிகளுக்கு அருகே நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினர். இதனால் நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. "நெரிசலை கட்டுப்படுத்த வெறும் ஒருங்கிணைப்பு மட்டுமே போதாது. இதற்காக உண்மைக்குமே பலனளிக்க கூடிய விதத்தில் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் தேவசம் போர்டு இது தொடர்பாக வாய்மொழியாக உறுதி கொடுக்கிறதே தவிர, வேலைகள் எதையும் செய்யவில்லை. நெரிசலை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து குறைந்தது 6 மாதங்களுக்கு முன்னரே இதற்கான ஏற்பாடுகளை தொடங்கியிருக்க வேண்டும். தரிசனத்திற்காக வரும் பக்தர்களை, வேகமாக நகர்த்தி விடுவதில் மட்டும் எதுவும் நடந்து விடாது. எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
5 அல்லது 6 பிரிவுகளாகப் பிரித்து மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் நிற்க முடியும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். காவல்துறையை மட்டும் குறை சொல்வது பலனில்லை. சன்னிதானத்தில் ஒரு நேரத்தில் எத்தனை பேர் தங்க முடியும்? சுவாசம் தடைபட்டு, பக்தர்கள் உயிரிழக்கும் சூழலுக்குத் தள்ளப்படக் கூடாது" என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதற்கிடையில், சபரிமலையில் நிலைமை கட்டுப்பாட்டிலிருப்பதாகவும், சன்னிதானத்தில் அச்சப்படும் சூழல் எதுவும் இல்லை என்றும் தேவஸ்வம் வாரிய தலைவர் கே.ஜெயகுமார் கூறியிருக்கிறார். ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்படும் என்றும், வரிசை வளாகம் திறம்படப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications