வங்கி கடன் தள்ளுபடி.. கேரள மக்களுக்கு உதவி செய்ய மத்திய அரசுக்கு மனமில்லையா.. ஐகோர்ட் சரமாரி கேள்வி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பபட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை தொடர்ந்தது. இதில் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததது. இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள் மத்திய அரசு அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் படிக்கவில்லையா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போது, வரலாற்றில் இல்லாத நிலச்சரிவு ஒரு நாள் இரவில் ஏற்பட்டது. ஒரு ஊரே இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண்ணோடு மண்ணாக மறைந்து போனாது. பலர் காணாமல் போனார்கள். குறிப்பாக சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரம் பாதிக்கப்பட்டனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அம்மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை..

இதையடுத்து கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெய்சங்கரன் நம்பியார், ஜோபின் செபஸ்டியான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு நடத்துகிறது. இந்த வழக்கில் முதலில் மத்திய அரசுக்கு பதில்அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து பதில் அளித்த மத்திய அரசு, வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது. கடன்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கூறியது.
அதிகாரம் இல்லையா
இதனால் கோபம் அடைந்த உயர்நீதிமன்றம், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கேள்விகளை எழுப்பியது. இதன்படி, மத்திய அரசுக்கு வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு அதிகாரம் இல்லை என்று கூற இயலாது. வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு மனது இருக்கிறதா என்பது தான் முதல் பிரச்சனையாகும். கடன்களை ரத்து செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யாரை முட்டாள்களாக ஆக்க முயற்சிக்கிறீர்கள்? மத்திய அரசு அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் படிக்கவில்லையா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
பொறுமையை சோதிக்கிறது மத்திய அரசு
மேலும் பேரிடர் பாதித்த குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி உதவி வழங்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கேரள மக்களுக்கு உதவி செய்ய மத்திய அரசுக்கு மனமில்லை என்றால், அதனை மக்களிடம் அவர்கள் தெரியப்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு கருணையை தேடவில்லை. கேரள மாநிலத்துடன் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டாம். மத்திய அரசு எங்களது பொறுமையை சோதித்துள்ளது.
கடன் வசூலிக்க தற்காலிக தடை
மத்திய அரசு அதிகார வரம்புக்கு உட்பட்ட வங்கிகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வங்கி கடன்களை வசூலிக்க தற்காலிக தடை விதித்தது. கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறுவதற்கு பதிலாக, வங்கிகளின் நிலைப்பாடு என்ன?, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் கூறினார்கள். இதையடுத்து மத்திய அரசு தரப்பில் 3 வாரம் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications