கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல கடைசி நேரம் வரை அனுமதி தராத மத்திய பாஜக அரசு.. புதிய பஞ்சாயத்து!
திருவனந்தபுரம்: குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில் குவைத் செல்ல இருந்த கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்-க்கு கடைசி நேரத்தில் மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்தது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
குவைத்தின் மன்காஃப் நகரில் 6 மாடிக் கட்டிடத்தில் பெரும் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த கட்டிடத்தில் 150க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் தங்கி இருந்தனர். கேரளா தொழிலதிபர் ஆபிரகாமுக்கு சொந்தமானது இந்த கட்டிடம்.

இந்த கட்டிடத்தின் தீ விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 45 பேர் இந்தியர்கள். கேரளாவைச் சேர்ந்த 24 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். குவைத் தீ வீபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்று இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். மேலும் குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை சந்தித்து ஆறுதலும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜும் கேரளா செல்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நெடும்பசேரி விமான நிலையத்துக்கு வீணா ஜார்ஜ் மற்றும் தேசிய சுகாதாரத்துறையின் மாநில இயக்குநர் ஜீவன் பாபு ஐஏஎஸ் ஆகியோர் சென்றிருந்தனர். ஆனால் மத்திய அரசானது கேரளா மாநில அமைச்சர் வீணா ஜார்ஜின் குவைத் பயணத்துக்கு கடைசி நிமிடம் வரை அனுமதி தரவில்லை. பொதுவாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை.
இதனால் குவைத் செல்லாமல் திரும்பிய அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி தராதது தவறான முன்னுதாரணம். கேரளா மாநிலம் பெருந்துயரமான சூழ்நிலையில் இருக்கும் நிலையில் மத்திய அரசின் இந்தப் போக்கு மிகவும் கடுமையான அதிருப்தியை தருகிறது என குமுறினார்.












Click it and Unblock the Notifications