20 பேர் கோடீஸ்வரர் ஆக போறாங்க.. கேரளாவில் ஜெட் வேகத்தில் நடக்கும் ஓணம் லாட்டரி! பாலக்காடுதான் டாப்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை அனல் பறந்து வருகிறது. ரூ.25 கோடி முதல் பரிசுத்தொகை கொண்ட இந்த டிக்கெட்டை கேரள மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள். 40 லட்சம் டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்தும் விற்று தீரும் நிலை வந்துள்ளது.
கேரளாவில் மாநில அரசே லாட்டரி விற்பனை செய்கிறது. அங்கு தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெறும். ரூ.40 மதிப்பு கொண்ட இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.75 லட்சம் கிடைக்கிறது. அது மட்டும் இன்றி வருடத்திற்கு ஆறு பம்பர் குலுக்கல் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷூ பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என ஆறு பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பல கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு சேட்டன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் ஓணம் பம்பர் லாட்டரியின் பரிசுத்தொகை ரூ.25 கோடியாகும்.
ஒணம் பம்பர் டிக்கெட் கேரளாவிவின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் வெளியிடப்படுகிறது. 25 கோடி ரூபாய் பரிசுத்தொகை என்பதால் இந்த டிக்கெட்டுகளுக்கு கேரள மக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் அளவுக்கு விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட் விற்பனை தொடங்கியதில் இருந்தே படு ஜோராக விற்பனை நடந்து வருகிறது. அடுத்த மாதம் 9 ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. குலுக்கல் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ள நிலையில், குலுக்கலுக்கு சில மணி நேரம் முன்பு வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். மொத்தம் ஆறு சீரியஸ்களில் இந்த டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது வரை 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 36 லட்சத்து 41 ஆயிரத்து 328 டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.
பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகப்படியாக 6 லட்சத்து 59 ஆயிரத்து 240 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளது. இங்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 470 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. மூன்றாவது இடத்தில் திரிசூர் உள்ளது. திரிசூரில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 450 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
ஓணம் பம்பரின் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. 2-வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி கிடைக்கும். மூன்றாவது பரிசாக ரூ.50 லட்சம் 20 பேருக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு ஓணம் பம்பரில் முதல் பரிசுத்தொகை தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு கிடைத்தது. அதற்கு முந்தைய ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு அடித்தது.
இந்த ஆண்டு ரூ.25 கோடியை அள்ளும் அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்க போகிறதோ என்ற ஏக்கத்துடன் சேட்டன்கள் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. எனவே கேரளா லாட்டரிகளை தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். கள்ளச்சந்தையில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு பரிசுத்தொகை கிடைக்காது.












Click it and Unblock the Notifications