இளம் பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ்.. அரசு பஸ் டிரைவரை கைது செய்தது கேரளா போலீஸ்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆபாசமான செய்திகள் மற்றும் மிரட்டல் அனுப்பியதாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு அதிவிரைவு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது, இரவில் திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் கார், அந்த பேருந்துக்கு பின்னால் வந்துள்ளது.

அந்த நேரத்தில் மேயர் காருக்கு வழிவிடாமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வளைந்து வளைந்து சென்றுள்ளார். உடனே ஒரு இடத்தில் பேருந்தை வேகமாக முந்திச் சென்ற மேயர் ஆர்யாவின் கார் அந்த பேருந்தை மறித்துள்ளது.
தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய மேயர் ஆர்யா ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மேயர் ஆர்யா போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஓட்டுநர் யதுவை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தனது பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது ஓட்டுநர் புகாரளித்தார். ஆனால் அந்த புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மேயர் மற்றும் டிரைவருக்கு இடையே நடந்த மோதல் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய பேருந்தில் இருந்த கேமராவை பரிசோதிக்க அமைச்சர் கணேஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால் அந்த பேருந்து கேமரா காட்சிகள் பதிவான மெமரி கார்டு மாயமானது.
இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருவதால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மெமரி கார்டு மாயமான விவகாரம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆபாசமான செய்திகள் மற்றும் மிரட்டல் அனுப்பியதற்காக எர்ணாகுளம் ஐக்கரநாட்டைச் சேர்ந்த கே.எஸ்.ஆர்.டி.சி டிரைவர் கரையாட்டுக்குன்னில் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், ஸ்ரீஜித்தை புத்தன்குரிஷ் போலீசார் கைது செய்தனர். கைது பதிவு செய்த பிறகு, ஸ்ரீஜித் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications