சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. எத்தனை பேர் தரிசனம் செய்துள்ளனர் தெரியுமா?.. வருவாய் எவ்வளவு?
திருவனந்தபுரம்: மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லட்சக்கணக்கில் கூடுதலாக பக்தர்கள் வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கோடிக்கணக்கில் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

சபரிமலைக்கு செல்வதற்கு 3 பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து மலையேறி ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெருவழிப் பாதை வழியாகச் செல்வது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம்.
சில பக்தர்கள் புல்மேடு எனும் வழியாகவும் சபரிமலைக்குச் செல்கின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் எனும் 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வர்.
நடப்பு ஆண்டில் மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டும் கார்த்திகை முதல் நாளான நவம்பர் 16 ஆம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு கடந்த 15-ம் தேதி மாலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பதினெட்டாம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்து 787 பேர் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதேபோல, கடந்த ஆண்டில் முதல் நான்கு நாட்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 73 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். நடப்பு ஆண்டில் முதல் நான்கு நாட்களில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 544 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல, கடந்த ஆண்டு முதல் நாளில் 30 ஆயிரத்து 657 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு 72 ஆயிரத்து 656 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த ஆண்டைவிட 4 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் பக்தர்கள் கூடுதலாக சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸார் சுழற்சி முறையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமம் இல்லாமலும் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பதினெட்டாம் படி ஏறியதும் சுற்றுப் பாதையில் செல்லாமல் நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். முதியோர், குழந்தைகளுக்கு உதவும் வகையில் கூடுதலாக ஒருவர் அவர்களுடன் செல்லலாம்.
இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இருப்பினும், பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications