ராப் பாடகர் வேடன் மீது வன்கொடுமை வழக்கு.. பெண் மருத்துவர் அளித்த புகாரில் கேரள போலீஸ் அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன். இளைஞர்களிடையே இவருக்கு என்று பெரியளவில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதற்கிடையே பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில் வேடன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பிரபல மலையாள ராப் பாடகர் வேடன். இவரது இயற்பெயர் ஹிர்தாஸ் முரளி.. 30 வயதான வேடன், கடந்த 2020 முதலே பல்வேறு மலையாள ராப் உலகில் பிரபலமான பாடகராக இருந்து வருகிறார். இதற்கிடையே இவர் மீது சமீபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேடன் மீது பாலியல் புகார்
ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை தன்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்து, வேடன் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்து பல முறை பணம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள திருக்காக்கரை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், கொச்சி நகரத் துணை காவல் ஆணையரை அணுகி தனது வாக்குமூலத்தை அளித்த பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கொச்சி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதேநேரம் வேடனிடம் இதுவரை விசாரணை நடத்தவோ அல்லது கைது செய்யவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
இந்த சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. குற்றம் பல இடங்களில் நடந்ததாக அந்த பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். திருக்காக்கரிலும் பலாத்காரம் நடந்ததாக அந்த பெண் குறிப்பிட்ட நிலையில், அங்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை ஒரு ரசிகையாக அந்த வேடனைச் சந்தித்ததாகவும், பின்னர் இருவருக்கும் இடையே ஒரு உறவு ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
அதேநேரம் வேடன் மீது பாலியல் புகார் வருவது இது முதல்முறை இல்லை. கடந்த 2021ல் மீ டூ புகார் வந்த போதே வேடன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. இருப்பினும், அப்போது யாரும் வேடன் மீது புகார் அளிக்காததால் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சம்பவம் பாரதிய நியாய சமிதா (BNS) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நடந்ததால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை
வேடன் மீதான சர்ச்சைகள் புதிதல்ல. கடந்த ஏப்ரல் 28ம் தேதி, அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி வேடன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை கொஞ்ச நாட்களிலேயே புலித்தோல் வைத்திருந்தாக வனத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதுபோக கடந்த மே மாதம் வேடன் தனது பாடல்கள் மூலம் பிரதமர் மோடி மீது அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகவும் சாதிப் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் கேரளாவைச் சேர்ந்த ஒரு பாஜக பிரமுகர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications