அதானியை பற்றி பேசும் போது மோடியின் கைகள் நடுங்குகின்றன.. ராகுல் காந்தி நேரடி 'அட்டாக்'
தன்னை பார்த்து ராகுல் காந்தியும், நாட்டு மக்களும் பயந்துவிடுவார்கள் என மோடி நினைக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு விஷயத்துக்காக மட்டுமே நரேந்திர மோடியை எண்ணி பயப்படுகிறேன். அது என்ன தெரியுமா?
திருவனந்தபுரம்: தொழிலதிபர் அதானியை பற்றி நாடாளுமன்றத்தில் நான் பேசும் போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் கைகள் நடுங்குவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
தொழிலதிபர் அதானி பங்குச்சந்தைகளிலும், முதலீடுகளிலும் பல்வேறு மோசடிகளை செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 7-ம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, அதானியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்புப்படுத்தி பேசினார். அதாவது, மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த இந்த 9 வருடங்களில்தான் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை பாஜக எம்.பி.க்கள் நேற்று வழங்கினர்.

"மக்களுக்கு தெரிய வேண்டும்"
இந்த சூழலில், தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு ராகுல் காந்தி இன்று வருகை தந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதானிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான தொடர்பு குறித்து இந்திய மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த விஷயத்தை நான் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். மோடியுடன் சேர்ந்து அதானி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போதெல்லாம், அதானிக்கு அந்நாடுகளின் ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கின்றன. அது எப்படி?

"அதானிக்காக விதிகள் மாற்றம்"
இன்றைக்கு 30 சதவீத விமானப் போக்குவரத்து அதானியின் வசம் இருக்கின்றன. மோடியுடன் நட்புறவில் இருப்பதால் மட்டுமே அதானிக்கு இவை கிடைத்திருக்கின்றன. முன்பு, விமான நிலையங்களை வாங்கும் நிறுவனங்களுக்கு பல விதிமுறைகள் இருந்தன. விமான நிலையங்களை நடத்திய அனுபவம் இல்லாதவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், தற்போது அதானிக்காகவே இதுபோன்ற விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று மிகப்பெரிய விமானநிலையமான மும்பை விமான நிலையமே அதானியின் வசம்தான் இருக்கிறது.

"கைகள் நடுங்குகின்றன"
நாடாளுமன்றத்தில் நான் அதானி விவகாரத்தை பற்றி பேசும் போது, எனது முகத்தையும், மோடியின் முகத்தையும் நீங்கள் பாருங்கள். மோடி எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறார் என்று பாருங்கள். அப்படி அவர் தண்ணீர் குடிக்கும் போது அவர் கைகள் நடுங்குவதை கவனியுங்கள். என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும். அன்று நான் மோடியை குற்றம்சாட்டி பேசினாலும், எனது பேச்சு மிக கண்ணியமாதாக இருந்தது. ஆனால், எனது பேச்சை அவர்கள் கத்தரித்துவிட்டார்கள். அதே சமயத்தில், என்னை நேரடியாக தாக்கி மோடி பேசிய பேச்சை அப்படியே அவர்கள் ஒளிபரப்பினார்கள்.

"மோடியை நினைத்து பயம்"
பிரதமர் நரேந்திர மோடி தன்னை மிக சக்திவாய்ந்த மனிதர் என நினைத்துக் கொண்டிருக்கிறார். தன்னை பார்த்து ராகுல் காந்தியும், நாட்டு மக்களும் பயந்துவிடுவார்கள் என அவர் நினைக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு விஷயத்துக்காக மட்டுமே நரேந்திர மோடியை எண்ணி பயப்படுகிறேன். அது என்ன தெரியுமா? ஒரு நாள் அவர் தொடர்பான உண்மைகள் வெளிவரும். அன்று அவர் எதிர்கொள்ள வேண்டும். அன்று அவர் பிரதமராகவே இருந்தாலும் அவர் அதை எதிர்கொண்டே ஆக வேண்டும். அன்றைக்கு அவரது நிலைமையை நினைத்துதான் நான் பயப்படுகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications