நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு! மத்திய அரசின் குழு கேரளா விரைந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யும் மத்திய அரசின் குழு ஒன்று கேரளாவுக்கு சென்றிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உயிரிழந்தனர். இவர்கள் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 12ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவி்ரமாக பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் குறித்த இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல மத்திய அரசின் சார்பில் வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யும் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரியலாளர் மால சாப்ரா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் ஹிமான்ஷூ சௌஹான் என பல்துறை வல்லுநர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நிபா வைரஸ் என்றால் என்ன?: இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒருவகை வைரஸ். தொடக்கத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதனுக்கும் பரவுகிறது. பெரும்பாலும் பழ வௌவால்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வௌவால்கள் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளில் நிபா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வௌவால்களிலிருந்து பன்றிகளுக்கும், அதிலிருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் கடந்த 1998ம் ஆண்டுதான் இந்த ரைவஸ் பாதிப்பு சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாதிப்பிலிருந்து மனிதர்களை காக்க ஆயிரக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன. இது அப்போதய சிங்கப்பூரில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
எப்படி பரவுகிறது?: இந்த வைரஸ் தாக்கப்பட்ட வௌவால்கள் பழங்களை கடிக்கும்போதும், பழங்களின் மீது சிறுநீர் கழிக்கும்போதும் அந்த பழங்களில் வைரஸ் தங்கிவிடுகிறது. இந்த பழங்களை மனிதர்கள் சாப்பிடும்போது வைரஸ் நேரடியாக மனிதர்களுக்கு பரவுகிறது. அதேபோல, இந்த பழங்களை பன்றிகள் சாப்பிடும்போது பன்றிகளின் உடலில் வைரஸ் புகுந்துவிடுகிறது. இப்போது இந்த பன்றிகளின் எச்சில், சிறுநீர் ஆகியவற்றிலிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. பின்னர் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் தொற்றிவிடுகிறது
அறிகுறிகள் என்ன?: இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்படும். இருப்பினும் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 5-14 நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்பட தொடங்கும். அறிகுறிகள் காய்ச்சலை போன்று இருந்தாலும், மருத்துவர்கள் சில தனிப்பட்ட அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளனர். இந்த அறிகுறிகள் மூலம் நிபா பாதிப்பை ஓரளவு உறுதி செய்யலாம். அதாவது, கடுமையான சுவாச தொற்று, சுவாச பிரச்னைகள், காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை புண், குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், நிமோனியா பாதிப்பு, மூளை வீக்கம் அல்லது மூளையழற்சி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு படிப்படியாக முன்னேற்றம் ஆகியவை நிபா பாதிப்பின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.
இந்த தொற்று பாதிப்பிலிருந்து தப்பினாலும், வலிப்பு மற்றும் ஆளுமை மாற்றங்கள் போன்ற நீண்ட கால பக்க விளைவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications