பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கிக்கு ரூ.10 கோடி நன்கொடை.. கேரளா அரசை விளாசிய சசிதரூர்.. பின்னணி
திருவனந்தபுரம்: நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதலில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. இதனால் நம் நாட்டு மக்கள் துருக்கியை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் துருக்கிக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய கேரளா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசை காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானை பதம் பார்த்தன. பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு உதவியும் செய்தது.
துருக்கி தனது நாட்டின் ட்ரோன்களை இயக்க ஆபரேட்டர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. இப்படி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தனுக்கு துருக்கி பக்கப்பலமாக இருந்து நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டது. இதனால் நம் நாட்டு மக்கள் துருக்கியை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். வர்த்தகர்கர் துருக்கி நாட்டுடனான வர்த்தகத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அதேபோல் துருக்கிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்த மக்கள் அதற்கான முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.
இப்படி துருக்கிக்கு நம் நாட்டு மக்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இதற்கிடையே தான் துருக்கிக்கு ரூ.10 கோடி நன்கொடை அளித்த கேரளா கம்யூனிஸ்ட் அரசை திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛2 ஆண்டுகளுக்கு பிறகாவத கேரள அரசு தனது தாராள மனப்பான்மை தவறானது என்று புரிந்து கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். அதோடு துருக்கிக்கு ரூ.10 கோடி வழங்கியதற்கு அதனை வைத்து வயநாடு உள்ளிட்ட கேரளாவின் இயற்கை பேரிடர் பாதிப்பு பகுதிகளுக்கு இன்னும் கூடுதலாக உதவி செய்திருக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
சசிதரூர் எம்பியின் இந்த பதிவின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் துருக்கி கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது பல ஆயிரம் மக்கள் இறந்தனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்த சமயத்தில் கேரளா அரசு ரூ.10 கோடியை நன்கொடையாக துருக்கிக்கு அளித்தது. இதுதொடர்பான அறிவிப்பை கேரளாவின் நிதி அமைச்சராக இருக்கும் பாலகோபால் கேரளா சட்டசபையில் அறிவித்தார்.
இதுபற்றி கேரளா நிதி அமைச்சர் பாலகோபால் 2023ம்ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, ‛‛துருக்கி நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் மனிதாபிமான அடிப்படையில் கேரளா ரூ.10 கோடி நன்கொடை வழங்குகிறது'' என்று கூறியிருந்தார். அதோடு ரூ.10 கோடியை துருக்கிக்கு வழங்கியிருந்தார்.
அதாவது துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மொத்தம் 53,537 பேர் இறந்தனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 213 பேர் காயமடைந்தனர். 140 பேரின் நிலைமை என்னவென்றே தெரியாமல் போனது. துருக்கியில் உள்ள 17 மாகாணங்களில் 11 மாகாணங்கள் பெரும் சேதங்களை எதிர்கொண்டன. இதையடுத்து உலக நாடுகள் துருக்கிக்கு உதவின.
நம் மத்திய அரசும் ‛ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் துருக்கிக்கு உதவியது.சி - 17 ரக இந்திய விமானப்படையின் 5 விமானத்தில் உதவிகள், நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பேரிடர் மீட்பு படையினர், டாக்டர்கள், நர்ஸ்கள் துருக்கினக்கு சென்றனர். மொத்தம் 250 பேர் மீட்பு பணிக்காக சென்னறர். மொத்தம் 130 டன் அளவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கேரளா நிவாரண உதவியாக துருக்கிக்கு ரொக்கப்பணமாக ரூ.10 கோடியை வழங்கியது. அதனை குறிப்பிட்டு தான் சசிதரூர் இப்போது கேரளா அரசை கடுமையாக சாடியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications