கடவுள் தேசமல்ல.. கைவிடப்பட்ட தேசம் வயநாடு! உறவினர்கள் எல்லாமே மண்ணுக்குள்! உயிர்பிழைத்தவர்கள் வேதனை
திருவனந்தபுரம்: கடவுளின் தேசமான கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். கேரளத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டம் உள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.
தொடர்ந்து, இன்று 4வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டில் உள்ள முண்டக்கை பகுதியில் தான் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக முண்டக்கை பகுதியில் உள்ள பூட்சரிமட்டம் என்ற கிராமத்தில் தான் மலைகளில் இருந்து பாறைகள், மண் துகள் முதலில் சரிந்து விழுந்தன. இந்நிலையில், தற்போது அந்த கிராமமே மண்ணிற்குள் புதைந்து வீடுகள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போயுள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மட்டும் 120க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாலங்கள் உடைந்துள்ளதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஆற்று வழியாக ஒரு ஜேசிபி இயந்திரம் மட்டும் கொண்டு செல்லப்பட்டு ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இன்று காலை வரை 316 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பல்வேறு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள மக்கள் அங்கு கொடுக்கப்படும் உணவு, உடைகளைப் பெற்றுக் கொண்டு இழந்த உறவினர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் பாறைகளும், பிணக் குவியல்களும், மரண ஓலமுமே கேட்பதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும் உதவி செய்து வருகின்றன.
இதுகுறித்து, பஞ்சாயத்து உறுப்பினரான அப்துல்கலாம் கூறியதாவது: என்னுடைய வீடு, சகோதரர்கள், எங்களது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் எல்லோரும் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டார்கள். என்னுடைய வீடு எங்கிருந்தது என்ற அடையாளம் கூட தெரியவில்லை. இந்த நிலச்சரிவில் யாருமே தப்பிக்கவில்லை, அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். எனது குடும்பத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. பாதிப்பு ஏற்படும்போது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால், என்னுடைய நான்கு வீடுகள், சொத்துகள் எல்லாம் நிலச்சரிவில் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த தம்பி மாடசாமி கூறியதாவது: சூரல்மலையில் நாங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனது மனைவி பெயர் வள்ளியம்மாள். இரவில் அதிபயங்கர மழை பெய்தது. பெரிய பெரிய கற்கள் உருண்டு வரும் சப்தம் கேட்டது. இதையடுத்து, எங்கள் பிள்ளைகளுடன் ஒரு டார்ச் மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டோம். புதிதாக கட்டிய வீடு உள்பட எனது இரண்டு வீடுகள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் போய்விட்டது. உடுத்திய உடையுடன் எங்களையும், எங்கள் பகுதி மக்களையும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு முகாமில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இங்கிருந்து எங்களை வெளியேற்றினால் எங்கேயும் போய் தங்க ஒரு கூரைகூட கிடையாது. அரசு தங்குவதற்கு எதாவது உதவி செய்தால் மட்டுமே எங்களால் மீள முடியும். இங்கு கொடுக்கப்படும் உடை, உணவை நம்பியே நாங்கள் இருக்கிறோம். வேறு எதுவும் எங்கள் கைகளில் இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.
சூரல்மலையைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறியதாவது- எதோ ஒரு பிரச்னை ஏற்படப்போகிறது என்று தெரிந்தவுடனேயே இரவு 12 மணியளவில் நாங்கள் குடும்பத்தினருடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோம். வீடு, சாலை எல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இங்குள்ள பலரும் குடும்பத்தில் உள்ளவர்களை இழந்துள்ளனர். உணவு, உடை, இருப்பிடம் என எதுவும் யாருக்கும் இப்போது இல்லை. முகாமில் கொடுக்கப்படும் பொருள்களைக் கொண்டே தற்போது இருக்கிறோம். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இனி எங்கு தங்கப் போகிறோம். என்ன செய்யப் போகிறோம் என்று எதுவும் தெரியவில்லை. எல்லோரும் நிற்கதியாக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications