‛‛தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’’.. பேஸ்புக் போஸ்ட்டால் சிக்கலில் இளைஞர்! கேரளாவில் சலசலப்பு
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கேரளாவில், "தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என்று பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இப்படி இருக்கையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

மோடியின் பேச்சு: சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பனஸ்வாராவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று சொன்னார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
சர்ச்சை: இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார்.
ராகுல் காந்தி பேச்சு: அதேபோல கேரளாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மோடியின் பேச்சுக்கு பாஜக தலைவர் நட்டாவுக்கும், ராகுலின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் மோடி பேச்சு குறித்து அவருக்குதான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று எதிரக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில்தான் நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. தேர்தல் நடைபெற்ற நாளில் கேரளாவின் காக்கநாட்டைச் சேர்ந்த முகமது ஷாஜி என்பவர் பேஸ்புக்கில் 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் மீது தேவையற்ற ஆத்திரமூட்டல், கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று காலை கைது செய்யப்பட்ட அவர், நேற்று மாலையே ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் தேர்தல் ஆணையம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications