கேரள அரசுடன் துணை நிற்போம். பணப் பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது.. பிரதமர் மோடி உறுதி!
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். பணப் பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என உறுதி அளிக்கிறேன் எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சூரல் மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்தனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இருவழிஞ்சி ஆற்றுப் பகுதிகள் மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட பூஞ்சேரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டார்.
நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பிரதமர் மோடி உடன், கேரளா ஆளுநர் ஆரிப் முகமது, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி ஆகியோரும் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, மதியம் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேசினார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், வயநாடு நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த உடன் அனைத்து தகவல்களையும் கேட்டு வந்தேன். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், தன்னார்வலர்கள், டாக்டர்கள் என அனைவரும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேரிடர் சாதாரணமானது அல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானவர்களின் கனவுகள் தகர்த்துள்ளது.
நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று நேரில் பார்த்தேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும், காயமடைந்தவர்களையும் சந்தித்தேன். பேரிடர் குறித்து அறிந்ததும் முதலமைச்சரை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி வருகிறது. அது இனியும் தொடரும்.
நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்கிறோம். கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். பணப் பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என உறுதி அளிக்கிறேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications