பேஸ்புக்கால் வந்த வினை.. சிறுமியை கடத்திய 55-வயது அரசு அதிகாரி.. கேரளாவில் நடந்த கொடூரம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாறைசாலை பகுதியை சேர்ந்த 14-வயது சிறுமியிடம் பேஸ்புக் மூலமாக பழகி கடத்தி சென்ற 55-வயதான பிரகாஷ் என்ற போக்குவரத்து அதிகாரியை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேஸ்புக் பழக்கத்தால் நடந்த இந்த விபரீத சம்பவம் பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.
தற்போதைய நவீன காலத்தில் இணைய வசதிகள் மூலமாக உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. சமூக வலைத்தளம் மூலமாக முன் பின் தெரியாதவர்களுடன் கூட பழக்கம் ஏற்பட்டு விடுகிறது.
சமூக வலைத்தள பதிவுகளை நம்பி சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மை முகம் தெரியாமல் பலரும் ஏமாறும் அவல நிலையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சமூக வலைத்தள மோசடி வலை
பண மோசடி, பெண்களை நேரில் அழைத்து பாலியல் மோசடியில் ஈடுபடுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். வீட்டுக்கு வீடு செல்போன்களே இலலாத அளவுக்கு ஸ்ம்பார்ட் பயன்பாடு பெருகிவிட்டதால் சிறார்களும் செல்போன்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதுபோன்ற சிறார்கள் வீட்டிற்கு தெரியாமல் சமூக வலைத்தளங்களில் நட்பு பாராட்டிக் கொண்டு ஒரு சிலர் விரிக்கும் மோசடி வலையிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

சிறுமியை கடத்திய அரசு அதிகாரி
அதுபோலத்தான் ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. அதுவும் கேரள மாநில போக்குவரத்து துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் 14-வயது சிறுமியை கடத்தி சென்றது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- களியக்காவிளை அடுத்த கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள பாறைசாலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். 55-வயதான இவர் கேரள அரசின் போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

பேஸ்புக் மூலம் பழக்கம்
பாறைசாலை பகுதியில் போக்குவரத்து மேற்பார்வையாளராக இருக்கும் பிரகாஷ் தனது பேஸ்புக்கில் அடிக்கடி கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். தனது பதிவுகளுக்கு கமெண்ட் செய்பவர்களுடன் உரையாடியும் வந்து இருக்கிறார். பேஸ்புக்கில் பலருடன் தொடர்பு இருந்த பிரகாஷிற்கு 14-வயது சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. வயதில் மூத்த நபரான பிரகாஷ், 14-வயது சிறுமி என்று கூட பாராமல் அந்த சிறுமியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் நேரில் கூட சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

காணாமல் போனதாக புகார்
இவர்கள் இருவரும் தொடர்ந்து பேசிவந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென சிறுமி கடந்த மாதம் 3 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயம் ஆனார். திடீரென மகள் காணாமல் போனதால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் மகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது
மேலும் சிறுமியின் செல்போன் எண் வைத்து அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில், சிறுமியுடன் பேஸ்புக்கில் பழகி பேசி வந்த அரசு ஊழியர் பிரகாஷ் தான் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 14-வயதே ஆன சிறுமியை போக்குவரத்து துறையில் பணியாற்றும் 55-வயதான அதிகாரி கடத்திச்சென்றது கேரளாவில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications