10 நிமிடம் லாட்ஜில் தங்கிய டொமினிக்! கேரள குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்.. வெளியான தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் மத வழிப்பாட்டு கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவாகரத்தில் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார். இவர் சரணடைவதற்கு முன்னர் ஒரு லாட்ஜில் 10 நிமிடங்கள் மட்டும் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், களமசேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூடத்தில் நேற்று முன்தினம் திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னரே மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. பிரார்த்தனை சபை முழுவதும் புகையும், நெருப்புமாக இருக்க உள்ளே இருந்தவர்கள் அனைவரும் தலைதெறிக்க வெளியே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு சிறுமி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோல 45 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கிய நிலையில், டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார். சரணடைவதற்கு முன்னர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், யகோவாவின் சாட்சியம் (Jehovah Witnesses group) குழுவினரின் கருத்துக்கள் தேசவிரோதமானவை என்றும், அவற்றை திருத்திக்கொள்ளும்படி பலமுறை தான் எச்சரித்தும் அவர்கள் கேட்காததால்தான் இந்த முடிவுக்கு அவர் வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில காவல்துறை மட்டுமின்றி, என்ஐஏவும் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் அவர் போலீசில் சரணடைவதற்கு முன்னர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள லாட்ஜில் 10 நிமிடங்கள் மட்டும் தங்கியிருந்திருக்கிறார். இதற்காக UPI மூலம் பேமென்ட் செய்திருக்கிறார். இது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் லாட்ஜில் தங்கினார்? வெறும் 10 நிமிடங்கள் மட்டும் தங்குவதற்கான காரணம் என்ன? லாட்ஜில் யாராவது அவரை நேரில் சந்தித்தார்களா? என்கிற கேள்விகள் போலீசாருக்கு எழுந்திருக்கிறது.
இது குறித்து விசாரணையில் மார்ட்டினிடம் கேட்கப்பட்டபோது, தான் ஏன் குண்டு வைத்தேன் என்பதை பேஸ்புக் நேரலையில் விளக்கவே லாட்ஜில் ரூம் போட்டு தங்கியதாக அவர் கூறியுள்ளார். அங்கிருந்து கிளம்பும்போது தனக்கு அவசரமான வேலை இருப்பதாக கூறி சென்றுவிட்டார். இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டவரிடம் விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல மற்ற அனைத்து ஆதாரங்களும் விசாரணை குழுவால் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்தான் குற்றம் செய்திருக்கிறார் என்பதை நம்புவதற்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
அதேபோல இந்த குண்டு வெடிப்புக்கு அவர் மட்டும்தான் காரணமா? அல்லது அவரை பின் இருந்து வேறு யாரேனும் இயக்குகிறார்களா? என்பது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்பில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இதில் 3 பேரின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications